நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமானது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன்.
முனைவர் ப.மு.நடராஜன் எழுதிய ‘நீரின்றி அமையாது உலகு – மூன்று சொற்களில் அறிவியல்’ என்ற நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது:நீர் மேலாண்மை குறித்த இந்தப் புத்தகம் 20 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் முனைவர் பட்ட ஆய்வுக்கு தகுதியானது. எதார்த்தமான மொழி நடையில் நூலாசிரியர் தான் எடுத்துக் கொண்ட பணியை முழுமையாக நிறைவேற்றி உள்ளார். எழுத்தின் வெற்றி என்பது அது வாசகனின் உள்ளத்தைத் தைக்க வேண்டும். இந்தப் புத்தகத்தில் உள்ள பல சொல்லாடல்கள் பெரிய இலக்கிய வாதிகளின் எழுத்துக்கு நிகராக உள்ளது.
நீர் மேலாண்மை என்பது இன்றைக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு தனி மனிதனும் அக்கறை கொள்ள வேண்டும். நீர் மேலாண்மை குறித்த அக்கறையை ஒவ்வொரு வாசகனிடத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்தப் புத்தகத்தை இளைய தலைமுறைக்கு கட்டாயம் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாக விவசாயக் கல்லூரி மாணவர்கள் இதைக் கட்டாயம் படித்து தங்களது ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றார் அவர்.
விழாவிற்கு ஆவுடையார்கோவில் மேனாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் இரா.துரைமாணிக்கம் தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதியை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் எஸ்.சுப்பையா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியை கவிஞர் தங்கம் மூர்த்தி ஒருங்கிணைத்தார். நூலாசிரியர் ப.மு.நடராஜன், கீதா நடராஜன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முன்னதாக இயற்கை விவசாயி ஜி.எஸ்.தனபதி வரவேற்றார். நிறைவாக தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் ப.செல்லத்துரை நன்றி கூறினார்.
கல்லூரியின் செயலாளர் எம்.ராஜாராம், திலவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், வாசகர் பேரவை செயலாளர் சா.விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.