Close
அக்டோபர் 5, 2024 10:29 மணி

பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதே நோக்கம்

புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம் இன்று நடத்தப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின்கீழ், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (02.12.2023) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகளை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு மருத்துவ வல்லுநர் குழுவினர்கள் நேரில் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்.

இம்முகாம் மூலம் மருத்துவ வசதிகள் சென்றடையாத இடங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே மருத்துவ முகாம்கள் நடத்தி நிறைவேற்றி வைப்பதாகும். மேலும் இம்முகாம்களில் குழந்தைகள் நலன், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதயநோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இம்மருத்துவ முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளை சேர்பதற்கான முகாம் இன்றையதினம் திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 14 அரசு மருத்துவமனைகளும், 10 தனியார் மருத்துவமனைகளும், 2 நோய் கண்டறியும் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 இலட்சம் வரை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

மேலும்  முதலமைச்சர்  பதவியேற்ற நாளில் கொரோனா பெருந்தொற்றினை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத் தியது மட்டுமல்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.4,000 வழங்கினார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது இயல்பான வாழ்வு நிலைக்கு திரும்பினார்கள். மேலும் மருத்துவத்துறையின் பயன்பாடுகளை பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று சேர்க்கும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்படுகிறது. ‘இன்னுயிர் காப்போம்” நம்மை காக்கும் – 48 திட்டத்தின் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பற்றப்பட்டு வருகிறது.

மேலும் இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்படுவதுடன், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. எனவே தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்டவைகள் மூலமாக மானிய உதவியுடன் கூடிய கடனுதவிகளை பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.

எனவே பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து பொதுமக்களும் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர்.மா.செல்வி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் .வள்ளியம்மை தங்கமணி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.எஸ்.ஸ்ரீபிரியா தேன்மொழி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (அறந்தாங்கி) மரு.எஸ்.நமச்சிவாயம், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி)  ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உஷாசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கருப்பையா, ஊராட்சிமன்றத் தலைவர் மாரிக்கண்ணு மயிலன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராம்சுந்தர், வட்டாட்சியர் பெரியநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top