Close
நவம்பர் 24, 2024 7:06 காலை

புத்தகம் அறிவோம்…மகாத்மா காந்தியின் நான்காவது விரல்

தமிழ்நாடு

நூல் அரங்கம்- மகாத்மா காந்தியிந் நான்காவது விரல்

காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழியைத் தந்தவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். பலர் இது குறித்து காந்தியிடமே கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பதில் சொல்லியிருக்கிறார் என்பது தான் சிறப்பு.ஒருவர் ஏரளமான கேள்விகளை அனுப்பிப் பதில் கேட்டிருந்தார். அதற்கு காந்தியும் பொறுமையாக பதில் அளித்திருந்தார். அக்கேள்வி பதில் பகுதியிலிருந்து ஒரு பகுதி.

கேள்வி: நீங்கள் உண்மையில் ஒரு மகாத்மாவா?
பதில் : நான் ஒரு மகாத்மாவாக இருப்பதற்கு விரும்பவில்லை. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளுல் நான் மிக மிகத் தாழ்ந்தவன் என்பதை நான் அறிவேன்.
கேள்வி : அப்படியாயின் மகாத்மா என்ற சொல்லைத் தாங்கள் விளக்க முடியுமா?
பதில் : எந்த ஒரு மகாத்மாவுடனும் எனக்கு அறிமுகமில்லாததா ல், நான் அதை பற்றி எந்த விளக்கமும் கூற முடியாது.
கேள்வி: நீங்கள் மகாத்மா இல்லையாயின், அதை நீங்கள் பின்பற்றுவோருக்கு எப்போதாவது கூறினீர்களா?
பதில்: நான் எவ்வளவுக்கு அதை மறுக்கிறேனோ அவ்வளவுக்கு அஃகு அதிகமாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. (யங் இந்தியா 27.10.1923)
(பக். 23).

காந்தி சில கூட்டங்களில் தன் கைவிரல்களை விரித்துக் காண்பிப்பார்.
முதலாவது விரலைக் காண்பித்து” இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு சம உரிமை” என்பார். இரண்டாவது விரலைக் காண்பித்து” இது கை ராட்டையில் நூல் கோர்ப்பது” என்பார். மூன்றாவது விரலைக் காண்பித்து” இது மது உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்ளாமை” என்பார். நான்காவது விரலைக் காண்பித்து” இது இந்து -முஸ்லீம் நல்லுறவு “என்பார். ஐந்தாவது விரலைக் காண்பித்து” இது பெண்களுக்கான சம உரிமை”என்பார். இன்றைக்கு காந்திஜி கூறிய நான்காவது விரல் தேவைப்படுகிறது.
(பக்.58).

பத்திரிக்கையாளர் ப.திருமலை, காந்தி இப்போது அதிகம் தேவைப்படுகிறார்” என்ற முதல் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்புதான் “காந்தியின் நான்காவது விரல்”.இன்றைய நிகழ்வுகளோடு காந்தியத்தை இணைத்து மிகச்சிறப்பாக, நல்ல தரவுகளோடு எழுதப்பட்டுள்ளது ஒவ்வொரு கட்டுரையும்.
காந்திமகாத்மாவா?
காந்தியும் தனிமனித வழிபாடும்,
காந்தியும்… சமயசார்பின்மையும்
காந்தியும்…நான்காவது விரல்
காந்தியும்… தீண்டாமையும்
காந்தியும்… கிராம ராஜ்யமும்,
காந்தியும்…அவரது மாடலும்,
காந்தியும்… ஜனநாயகமும்,
காந்தியும்… மருத்துவமும்,
காந்தியும்… கல்வியும்,
காந்தியும்… மதுவும்,
காந்தியும்… பெண்களும்,
காந்தியும்… ஏழைகளும்,
காந்தியும்… ஊடகங்களும்,(புள்ளி இருக்கும் இடத்தில் காந்தியைச் சேர்த்துக் கொள்ளவும்)
காந்தியின் தண்டி யாத்திரை,
காந்தியின் மரணம் -என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன. காந்தியை அறிய விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வரவு. மண், மக்கள், மனிதம் வெளியீடு,மதுரை.98656 28989.ரூ.220.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top