Close
நவம்பர் 24, 2024 11:18 மணி

திருவொற்றியூரில் வெவ்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி

சென்னை

திருவொற்றியூரில் புயல் மழைக்கு 4 பேர் பலி

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி திருவொற்றியூர் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளநீர் கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக வீடுகளுக்குள் புகுந்து தேங்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜாஜி நகர் அம்மன் கோயில் 3-வது தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (54).  மழைநீருக்கு மேல் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்த இவருக்கு புதன்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மின்சாரமும் இல்லை. மேலும் யாரையும் உதவிக்கு அழைப்பதற்கு செல்போனும் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு புதன்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதே தெருவைச் சேர்ந்த சுமதி என்ற 90 வயதைக் கடந்த மூதாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.  ராஜா சண்முக நகர் 4-வது தெருவை சேர்ந்த சத்தியநாராயணன் (38) வெல்டர். இவருக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளது.

இவர் புதன்கிழமை இரவு உணவு வாங்கி வருவதற்காக மணலி விரைவு சாலையைக் கடக்க முற்பட்டபோது அங்குள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்து வெள்ளநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் (22) மணலி புதுநகர் ஈச்சங்குழியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மழைநீர் வெள்ளத்தில் மழை மூழ்கி பரிதாபமாக உயிரிழந் தார்.

ஒரே நேரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top