உண்மையான அறிஞரின் உயர்பண்புகள்.அறிஞர் (ஞானி) எனப்படுபவர் – ஆத்ம ஞானம் (தன் அடிப்படையை அறிதல்) முயற்சியுடைமை, சகிப்புத்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பார். மேலும் வாழ்க்கையின் குறிக்கோள்களைக் கைவிடாதவராகவும் இருப்பார்.
அறிஞர் எனப்படுபவர் – கோபம், சந்தோஷம், கர்வம், மிகையான கூச்சம், முரட்டுப் பிடிவாதம், வறட்டு சுயகெளரவம் ஆகியவற்றின் வசப்படுவதில்லை. வாழ்க்கையின் உன்னத லட்சியங்களை நோக்கி மூன்னேறு வதை மேற் கூறியவை தடுத்து விடும் என்பதால் அவை தன்னை பாதிக்க இடங்கொடுப்பதில்லை.
அறிவிலி யார்?
அறிவிலி எனப்படுபவன் தனக்கு அறிவில்லை என்பதைப் பொருட்படுதாமல் கர்வமாக இருப்பான். ஏழையாக இருந்தாலும் திமிராக நடந்துகொள்வான். தன் விருப்பங்களை தவறான வழிமுறையின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும் தயங்கமாட்டான்; அல்லது முயற்சிக்காமலேயே அவை பூர்த்தியாக வேண்டுமென எதிர்பார்ப்பான்.
அறிவிலி எனப்படுபவன் – தன் சொந்த வேலையைக் கவனிப்பதை விட்டுவிட்டுப் பிறரது வேலையில் தலையிடு வான். தன் சொத்தை தொலைத்துவிட்டு பிறர் தயவில் வாழ்வான். வெளிப்பார்வைக்கு அன்புள்ளவன் போல் நடித்துக்கொண்டு நண்பர்களுக்கு துரோகம் செய்வான். அத்தியாயம் 1.(பக்.30, 31, 35).
“விதுர நீதி ” பகவத்கீதைக்கு இணையான நீதிநூல்.வியாசரின் மகனான விதுரர் அருளிய நூல். திருதராஷ்டி ரருக்கு நெருக்கமானவராகவும், நல்ல ஆலோசகராவும் விளங்கியவர். கண்ணன் அர்சுனனுக்கு கீதையை வழங்கியது போல் திருதராஷ்டிரனுக்கு விதுரர் வழங்கியது விதுர நீதி. கீதையைப் படிக்க விரும்புகிறவர்கள் இதையும் வாசியுங்கள்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நூலகத்தில் கண்டெடுத்த, சமஸ்கிருதத்தில் இருந்த நூலை நமக்கு தமிழாக்கித் தந்திருப்பவர் முனைவர் என்.ஸ்ரீதரன். இந்திப் பேராசிரியராக பணியாற்றியவர். தமிழ் ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர். 100 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். காதுகேளாதவர். மன்னர் கல்லூரியில் அவர் பணியாற்றியபோது நானும் அவரும் நண்பர்கள்.
“வாழ்க்கையின் மாலைப்பொழுதில் இருக்கும் நான், இனிப் புதிதாகப் படித்துப் பின்பற்றுவதற்கு என்ன மிஞ்சியுள்ளது என்ற மனநிலையில் உள்ள நான், விதுர நீதியைப் படித்ததும், இதிலுள்ள அறிவுரைகளில் நம்மால் முடிந்தவற்றை இருக்கின்ற வரை பின்பற்றிப் பார்க்கலாமே என்று தோன்றியது.
என்னுடன் ஒப்பிடுகையில் இளைய தலைமுறையினருக்கும் நடுத்தர வயதினருக்கும், நானிலம் மெச்ச நல்லவண்ணம் வாழும் விருப்பம் உடையவர்களுக்கும் அதிக அளவில் இந்நூல் பயன்படுமெனத் தோன்றியது. அதன் விளைவே இந்தத் தமிழ்மொழி பெயர்ப்பு” என்று தான் விதுர நீதியை மொழி பெயர்த்ததற்கான காரணத்தைச் சொல்கிறார் ஸ்ரீதரன்.
வெளியீடு-கங்கை புத்தக நிலையம்,23, தீனதயாளு தெரு,
தியாகராயநகர்,சென்னை. 600017,044 – 24342810.ரூ.70.
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #