பதநீர், இளநீர், நீராபானம் சாப்பிட்டுருப்பீங்க….
‛தென்னங்குருத்து’சாப்பிட்ட அனுபவம் இருக்குங்களா…?
தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர், பதனீர், நீராபானம், கள்ளு, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்களை சாப்பிட்ட அனுபவம் எல்லோருக்கும் உண்டு. தென்னங்குருத்து சாப்பிட்ட அனுபவம் சிலருக்கு மட்டுமே உண்டு.
தேனியில் கிடைக்கும் தென்னங்குருத்தை வாங்க இதன் சுவை அறிந்த பல வாடிக்கையாளர்கள் பக்கத்து கிராமங்க ளில் இருந்து தேனிக்கு வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
மாநிலம் முழுவதும் தென்னை விவசாயம் செழிப்பாகவே நடந்து வருகிறது இதில் இருந்து இளநீர், தேங்காய் எல்லோரும் விரும்பிய உணவாக உள்ளது. சிலர் தென்னங்கள்ளு குடிப்பார்கள். பலர் பதனீர், நீரா பானம் சாப்பிடுவார்கள். தென்னையில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர தென்னை சிலாப்புகள், கிடுகு கூரைகள், வரிச்சுகள், மட்டைகள் என தென்னையில் பயன்படாத பொருட்கள் என எதுவுமே இல்லை.
அதில், தென்னங்குருத்தின் சுவையும், மகிமையும் முற்றிலும் விவசாயம் சார்ந்த குடும்பங்களுக்கு மட்டுமே உரித்தானது.
தேனியில் பகவதியம்மன் கோயில் தெருவில் வசித்துவரும் முத்துப்பாண்டி(45) என்பவர் 25 ஆண்டுகளாக தென்னங் குருத்து மட்டும் விற்பனை செய்து வருகிறார்.
இவர் கொண்டு வரும் தென்னங்குருத்து சில மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுகிறது. குறைந்தது 10 ரூபாய் முதல் அதிக பட்சம் எவ்வளவு தேவையோ அதற்கு ஏற்ப சீவிக்கொடுப் பார். அதிலும் நுனியில் உள்ள பச்சிளம் குருத்து தேவை என முன்பதிவு செய்து காத்திருப்பவர்களும் உண்டு.
இது குறித்து முத்துப்பாண்டி கூறியதாவது: மிகவும் சுவையும், மருத்துவக் குணமும் கொண்டது தென்னங்குருத்து. தென்னந் தோப்புகளில் நெருக்கமாக நடவு செய்த பின்னர் சில மரங்களை அகற்றுவார்கள். சில மரங்களில் காய்ப்பு குறைவாக இருக்கும். சில மரங்களில் காய்ப்பு இருக்காது. இது போன்ற மரங்களை அகற்றி விட்டு வேறு மரங்களை நடவு செய்வார்கள்.
தென்னங்குருத்து விற்பனை மிக, மிக எளிது. ஆனால் அதனை வாங்க தேனி மாவட்டம் முழுவதும் அலைய வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான தென்னை விவசாயிகளிடம் நான் மொபைல் நம்பர் கொடுத்து வைத்திருப்பேன். அவர்கள் மரம் அகற்றினால் குருத்துப்பகுதியை எனக்கு கொடுப்பார்கள்.
இதில் எனக்கு குறைந்த வருமானவே கிடைக்கிறது. இருப்பினும் தரமான பொருள் விற்கிறோம் என்ற திருப்தி உள்ளது. கல்லுாரி மாணவிகள் தான் தற்போது தென்னங் குருத்தினை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின் றனர். இவ்வாறு கூறினார்.