Close
நவம்பர் 22, 2024 12:28 காலை

புத்தகம் அறிவோம்… தமிழின் தனிச்சிறப்பு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தமிழின் தனிச் சிறப்பு

எனக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையெல்லாம் கேட்பேன், அடிகளார் எந்த நூலையும் பாராமலே எளிய நடையில் விடையளிப்பார். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளெல்லாம் அடிகளாரால் களையப்பட்டன. சங்க நூல்களை நல்ல கண்கொண்டு என்னை நோக்கும்படி செய்தவர் அடிகளாரே யாவார். எனக்கு அறிவு வெளிச்சம் தோன்றுவதற்கு காரணமாயிருந்தவர் அடிகளாரே. அவரை என் குரு என்பேன்.

தமிழ்நாட்டில் ஒரு விழிப்பை உண்டாக்கியவர் அடிகளார். பழைய காலத்திலே அடிகளார் விதைத்த விதைதான் நீண்ட காலமாக வளர்ந்தோங்கி வருகிறது.

அடிகளாரின் அரை மணி நேரப் பேச்சைக்கேட்டால் 1000 கலைகளைக் கேட்ட மாதிரியாகும்; படித்த மாதிரியும் ஆகும். அடிகளாரின் உடல் நல்ல உடல்.மறைமலையடிகள் பற்றி திரு.வி.கல்யாணசுந்தரமுதலியார்.(பக்.6,7,8) .

“எழுத்திலே உயிர் எழுத்தென்றும், மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல், பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர் 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழியைத் தெரிந்தவர்கள் தமிழர்களே. Dr.Brain என்ற ஆசிரியர் இதை ஒப்புக் கொண்டு குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன் முதலில் இலக்கிய இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.

தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அகரத்தைப் பற்றித் தொல்காப்பிய ஆசிரியர் முறைப்படி காட்டியிருக்கிறார். ஓசையை அறிந்ததும் அதனை எழுத்து வடிவிலே கொணர்ந்து நெடுங்கணக்கிட்ட பெருமை தமிழர்களுக்கே உரியது. வேறு எவர்க்கும் உரியதன்று.

எழுத்துக்களை ஒலியெழுத்தென்றும் வரியெழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே. தொல்காப்பியம் என்னும் அரிய நூல் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிராவிட்டால் இவைகளையெல்லாம் நாம் அறிந்துகொள் வதற்கு வழியில்லை. எழுத்து, சொல், பொருள்,யாப்பு, அணி என்று தமிழர்கள் இலக்கணத்தை 5 பகுதிகளாக வகுத்துள்ளாாகள். அகத்தினை -புறத்தினை என்பது பற்றி தொல்காப்பியர் விலக்கினார்

பயிர் நூலைப்பற்றியும் (Botany), உயிர் நூலைப்பற்றியும் (Zoology) தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். எந்தப் பயிர் எந்த நிலத்தில் வளரும்? எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும்? எந்த நிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம்? எது நாகரீகம் என்பது பற்றியெல்லாம் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். உலகத்திலே கண்டறியப்படுகின்ற Geology பற்றியும் தொல்காப்பியத்திலே காணலாம்.(பக். 17, 18, 19).

சென்னை சைதைத் திருவள்ளுவர் சிவநெறிக் கழகத்தின் சார்பில், 10.4.1949 அன்று, பல்லாவரம் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார் அவர்கள், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் “தமிழின் தனிச்சிறப்புகளும் தமிழர் கடைமைகளும்” என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவம்தான்” தமிழின் தனிச்சிறப்பு” நூல்.

இச் சொற்பொழிவில், உலக மொழிகளைப் பற்றிய விபரம், மொழியின் தோற்றம், தமிழ் இலக்கணம், தமிழ் இயல், தமிழ்நாடு, தமிழ் உலகில் தோன்றிய முதல் மொழி, தமிழின் ஆற்றல்,தமிழின் தரம், தமிழின் இனிமை, தமிழின் சிறப்பு அகியவற்றைப் பற்றி அழகாக பேசியிருக்கிறார் அடிகளார். மேலும் தமிழை உயர்த்துவதற்கும், பெருமைபடுத்துவதற்கும் தமிழர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற தனது வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறார் இச் சொற்பொழிவில் அடிகளார்.வெளியீடு,முல்லை பதிப்பகம், 15 ரூபாய்.

# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top