Close
நவம்பர் 21, 2024 2:41 மணி

புத்தகம் அறிவோம்… எம்ஜிஆர்- நடிகர் முதல்வரானது எப்படி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எம்ஜிஆர்-நடிகர் முதல்வரானது எப்படி

இளம் வயதிலேயே நடிப்புத் தொழிலில் இறங்கியவருக்கு அது வாழ்வின் ஓர் அங்கமாக இல்லை; அது வாழ்வின் மைய அச்சாக இருந்தது.அது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவர் நடிப்பை பிறர் ரசித்தது அப்புறம். அதற்கு முதல் ரசிகர் அவரே. நாடகக் கலையிலிருந்து சினிமா வாழ்வின் சிகரத்தை தொட்ட வரை அவர் நடிப்புக்கலையை மிகுந்த ரசனையோடு செய்தார், உளமார நேசித்தார்.

“நடிப்புக்கலையிலும் தான் எந்தப் பகுதிக்கு ஏற்றவன் என்பதை உணர்ந்து, வீரசாகசம் புரியும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவன் என்பதைத் தெளிந்து அதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த இலக்கை அடையக் கடும் முயற்சி, பயிற்சி மேற்கொண்டார். உழைப்பும் ஊக்கமும் அப்போதே வெளிப்பட்டன.

“தோற்றப் பொலிவிலும் , சிந்தனையோட்டத்திலும் முதலில் காந்தியமே மேலோங்கி காணப்பட்டது. எனினும் சினிமா உலகில் போட்டி யை எதிர் கொள்ளவும், தனது நிலையை வளர்த்துக்கொள்ளவும் தி.மு.க. சார்பு உதவும் என்று கணக்குப் போட்டே அதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்… நேரடியாக தி.மு.க.வில் சேர்ந்தார்.

தொழில் போட்டி, தனி மனிதப் பொறாமை, அரசியல் விரோதம் ஆகியவற்றின் காரணமாக எம்.ஆர்.ராதாவால் 1967 தேர்தலின் போது சுடப்பட்டார். உயிர் தப்பியவருக்கு தேடாமலேயே தியாகத் தழும்பு கிட்டியது. இது திமுகவிலும். மாநிலத்திலும் அவருக்கு பெரும் அனுதாபத்தை ஈட்டி தந்தது.திமுகதமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததற்கு எம் ஜி ஆரின் புகழும் ஒரு முக்கிய காரணம் என்பது அண்ணா முதற்கொண்டு சகல தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டது. பக்.234,35, 36).

அமெரிக்காவில் குடியரசு தலைவராக இருந்த ரொனால்டு ரீகன், உலகில் முதல் நடிகர் (எனக்குத் தெரிந்து) அரசியலில் வெற்றி பெற்றது. வெற்றிகரமான குடியரசு தலைவராக இரண்டு முறை இருந்தார்.

இந்தியாவில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி அரசிய லில் வெற்றிபெற்ற முதல் நபர் எம்.ஜி.ஆர். முதல்வர் என்ற நிலையில் இறுதிவரை தோற்கடிக்க முடியாத நபராகவும் இருந்தார். பின்னால் ஆந்திராவில் வந்த என்டி. ராமாராவ் இவர் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

பேரா.அருணன், “அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி?” என்ற நூலைப் போலவே “எம். ஜி.ஆர்- நடிகர் முதல்வரானது எப்படி?” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

எம் ஜி ஆரின் வாழ்க்கையின் தொடக்கநிலை தொடங்கி 1977 ல் முதல்வரானது வரையிலான செய்திகளை மிகச் சிறந்த தரவுகளுடன் நூலாக்கியிருக்கிறார். இந்நூலின் வழி தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியலையும் அறிந்து கொள்ளலாம்.அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் புகழ் நிலைத்து நிற்பதற்கான காரணத்தை இந்நூலை வாசித்தால் புரிந்துகொள்ளலாம்.

” என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளே.””அண்ணா நாமம் வாழ்க.”எம் .ஜி.ஆர் தவறாமல் உச்சரிக்கும் வார்த்தை கள்.வசந்தம் வெளியீட்டகம்,மதுரை-ரூ .100.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top