Close
நவம்பர் 21, 2024 7:46 மணி

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே.. பொன் வண்டு..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பொன்வண்டு

நம் பள்ளிப் பருவத்தில் பொன்வண்டுகளையும்,  தட்டான் பூச்சி களையும்,பட்டாம் பூச்சிகளையும் பாடாய் படுத்தியதை, As flies to wanton boys are we to the gods; They kill us for their sport – என்கிற ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகத்தில் வரும் வரிகள் நினைவுக்கு கொண்டு வருகிறது.

சாதுவான உயிரினங்களில் சில ஊர்வன பறப்பனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நம் சிறுபிள்ளை பருவத்து விளையாட்டு துணைக்கு எடுத்துக்கொண்டதில்பொன்வண்டு மறக்க முடியாத ஒன்று. அருவருப்பை தராத, அழகான, சாதுவான இந்த பொன்வண்டு நம் தேர்வாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

வண்டுகடி என்றாலே அதற்கு தகுந்த மருந்து கிடைப்பதில்லை என்கிற சூழலில், ஒரு வண்டு இனத்தோடு நாம் சிறுவயதில் விளையாடி இருக்கிறோம். ஆம் மனிதனை கடிக்காத, விஷத்தன்மை அற்ற ஒரு வண்டு இனம் பொன்வண்டு. கடிக்காது. எனினும் தலைக்கும் உடம்பிற்கும் இடைப்பட்ட மேல் பகுதியில் விரல் வைத்தால் நசுக்கி காயம் செய்துவிடும். அதை நாம் வண்டு கடித்து விட்டது என்று கூச்சலிடுவோம்.

ஸ்டெர்னோசெரா கிரைசிஸ் என அழைக்கப்படும் பொன் வண்டு, அதன் பளபளப்பான நிறத்திற்காக அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கலாம். உலகில் உள்ள பல்லுயிர்களில் வெறும் பதினைந்து சதவீத உயிர்களை மட்டும்தான் இதுவரை நாம் கண்டறிந்து பெயர் வைத்திருக்கிறோம் என்றால் நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாத இயற்கை அன்னை யின் மடியில் தவழும் பல்லுயிர் வளம் எத்தகையது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

நாமறிந்த பொன்வண்டு இரண்டு நிறங்களில் இருக்கும். கிட்டத்தட்ட பச்சை நிற தலை மற்றும் சிகப்பு நிற இறக்கையின் மேல் பாதுகாப்பு மூடியுடனும், பச்சை நிற தலை மற்றும் பச்சை நிற இறக்கையின் மேல் பாதுகாப்பு மூடியுடனும் காணப்படும்.

இவை பல நிறங்களில் முட்டையிடும். இலந்தை பூக்கும் சமயங்களில், மழை அதிகம் பொழியும் காலங்களில் அதிகம் காணப்படும் இந்த வண்டுகள் கொடுக்காப்புளி, புன்னை மரங்களில் அதிகமாக இருக்கும்.

1960 மற்றும் 1970 களில் தென்னிந்தியாவில் அதிகமாக காணப்பட்ட இந்த வண்டுகள் காடழிப்பு மற்றும் பிற புவியியல் காரணங்களால் கண்ணில் படுவது அரிதாகி விட்டது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் நாம் இழந்த உயிரினங்களில் பொன்வண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் சிகப்பு நிற இறக்கையுடன் கூடிய பொன்வண்டுகளை நாம் சிறு வயதில் தீப்பெட்டியில் அடைத்து விளையாடியது, அடைத்துவிட்டு கொடுக்காப்புளி இலை, இலந்தை இலை இவற்றை போட்டுவிட்டு பள்ளிக்கு சென்றது, சில நாட்களில் துணிப்பையின் உள்ளே மறைத்து, ஆசிரியருக்கு தெரியாமல் வகுப்பறையில் பார்த்து ரசித்தது,.

இடைவேளையின் போது பள்ளித் தோழமைகளிடம் காண்பித்து பெருமிதம் கொண்டது, பள்ளியில் இதே நினைவுடன் இருந்துவிட்டு கடைசி மணி அடித்தவுடன் வீட்டிற்கு வந்து உடனடியாக எத்தனை முட்டை இட்டு இருக்கிறது என்று பார்த்து மகிழ்ந்தது.

அதன் கழுத்து பகுதியில் இலையை வைத்து வெட்டி அந்த வண்டுக்கே அதை உணவாக கொடுத்தது, வண்டு பறந்து விடாமல் இருக்க கழுத்தை சுற்றி நூல் கட்டியது .., என அந்த காலம் தந்த அருமை நினைவுகள் தற்போது, ஷேக்ஸ்பியர் வரிகளோடு ஒப்பிட செய்கிறது.

பிரபஞ்சத்தின் மகத்தான திட்டத்தில் நமது இருப்பு பற்றிய ஆழமான யோசனை தருவிக்கும் வார்த்தைகள் அவை. முதல் பார்வையில், மனிதர்களாகிய நாம், குறும்புக்கார குழந்தை களிடத்தில் ஈக்கள் அகப்பட்டு இருப்பது போல, ஒரு விளையாட்டுப் பொருளாக தெரிகிறது.

நாம் அவர்களின் விருப்பங்களுக்கு உட்பட்டு, அவர்கள் பொழுதுபோக்கிற்காக நம் வாழ்வோடு விளையாடுகிறார்கள் என்பதான இந்த நேரடி விளக்கம் நமது பாதிப்பையும், இறையின் இரக்கமற்ற தன்மையையும் வலியுறுத்துகிறது என்று காலம் தந்த எனது ஞானம், கர்ம வினைப்பயன் பற்றி எல்லாம் யோசிக்க வைக்கிறது.

வலிந்து வலிந்து குழந்தை பருவத்தில் பூச்சிகளோடு, பிராணிகளோடு விளையாடினாலும் அவைகளுக்கு வலிகளை தரவேண்டும், அதன் விடுதலையை பறிக்க வேண்டும் என்பது நம் எண்ணமாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்த வயதில் ஓர் இன்பம், ஓர் அனுபவம்.., அது ஒரு நாளோ இரண்டு நாளோ, அதிகபட்சமாக ஒரு மாதமோ நீடித்திருக்கும். அதன் பிறகுபொன் வண்டிலிருந்து, விளையாட்டு கவனம் தட்டான் பூச்சிக்கும், பட்டாம் பூச்சிக்கும் தாவி விடும்.

நம் குழந்தை பருவத்தில் அறிந்து வைத்திருந்த வண்டுகளும், தாவரங்களும், அவற்றுடன் நாம் கொண்டிருந்த பிணைப்பும், இணைப்பும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு எட்டாக்கனி. நாம் அடைந்த துள்ளல்கள்..

அழியாத கோலங்கள் அவை. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு, நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சுகந்தம் புரியவில்லை. அதிலும் பொன்வண்டு மின்மினி, தட்டான் பூச்சிகளை பிடித்து விளையாடிய அனுபவங்கள் புலம்பெயர் பிள்ளைகளுக்கு அறவே கிடைக்கப்போவதில்லை.

கணினியும், அலைபேசியும் அவர்களை ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. ஒரு விழுக்காடு கூட பூச்சி தாவரங்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை நாம்.

அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியது உண்மை என்றாலும், என்றாவது ஒரு நாள் இந்த சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும். அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டு அழிந்து போன அடையாளங்களை பிரதி எடுத்து வைப்போம். அப்போது அவர்களுக்கு இவை பயன்படும்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top