Close
நவம்பர் 22, 2024 6:43 காலை

புத்தகம் அறிவோம்… நமது நோக்கம்…ராமநாதபுரத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை வீச்சு

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நமது நோக்கம்

நமது நோக்கம் என்ற தலைப்பில் ராமநாதபுரத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை வீச்சு.. “மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் அவர்களே, மேலைநாடுகளில் நமது மதத்திற்காகவும், நம் தாய்நாட்டிற்காகவும் என்னால் ஏதாவது சிறிய வேலை செய்ய முடிந்தது என்றால், தங்கள் சொந்த வீடுகளிலேயே ஆழமாகப் புதைந்து கிடக்கின்ற விலைமதிப்பற்ற ரத்தினங்களை அறியாத நம் நாட்டு மக்களின் கவனத்தை அதன் மீது திருப்பி, அவர்களின் உணர்ச்சிகளை விழிக்கச் செய்ய முடிந்தது.

அறியாமையாகிய குருட்டுத் தனத்தின் காரணமாக, தாகத்தால் தவித்து வாடி, உயிர்பிழைக்கும் வழி தேடி எங்கோ உள்ள சாக்கடைத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தவர் களை அழைத்து, தங்கள் சொந்த வீட்டிலேயே வற்றாமல் பொங்கிக்கொண்டிருக்கின்ற நிரந்தர ஊற்றுநீரைக் குடிக்குமாறு என்னால் செய்ய முடிந்தது.

நமது மக்களை விழிப்புணர்த்தி, செயல்படத் தூண்டி, எல்லாவற்றிலும் இந்தியாவின் உயிர்த்துடிப்பு மதம், மதம் மட்டுமே என்பதைப் புரிய வைக்க முடிந்தது.  அந்த உணர்வு இல்லாது போனால் எத்தனை அரசியல்கள் இருந்தாலும், இந்த நாட்டு மக்களின் மீது குபேரனின் செல்வத்தை கொட்டிக் குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும் என்று நான் அவர்களுக்கு உணர்த்த முடிந்தது. இவற்றுக்கான பெருமை தங்களையே சாரும்.

ஏனெனில் நீங்கள்தான் எனக்கு முதன்முதலில் இந்த எண்ணத்தைத் தந்தீர்கள். நீங்கள்தான் இடைவிடாமல் என்னை இத்தகைய வேலையில் தூண்டி வந்தீர்கள். எதிர் காலத்தை உள்ளுணர்வால் புரிந்துகொண்டது போல் நீங்கள்தான் என் கைகளைப் பிடித்து அந்தப் பணிக்கு அழைத்துச் சென்றீர்கள்.

அதற்காக எல்லா வழிகளிலும் உதவினீர்கள், ஒரு போதும் தயங்காமல் இந்தப்பணியில் என்னை இந்தப் பணியில் உற்சாகப்படுத்தினீர்கள். எனவேதான் எனது வெற்றியில் மகிழ்கின்ற முதல் மனிதராக நீங்கள் இருக்கின்றீர்கள். அதைக் காணவே இந்தியாவிற்கு திரும்பும் வழியில் உங்கள் அரசில் முதன்முதலில் இறங்க நேர்ந்தது போலும்(பக்.8-10).

மிகக் கீழான ஜாதியில் பிறந்தவராயினும் அறிவால் உயர்ந் திருப்பின் அவரிடமிருந்து உயர்ந்த அறிவை மிகுந்த பக்தியுடன் கற்றுக்கொள். தாழ்ந்த குலத்தவரிடமிருந்து வருமானாலும் முக்திக்கு உரிய வழியை அவருக்குத் தொண்டுகள் செய்து அறிந்து கொள்.

ஒருத்தி சிறந்தவளாக இருப்பானானால் கீழான குலத்தில் பிறந்திருந்தாலும் மணந்துகொள். இவை மகத்தான இணையற்ற சமுதாய விதி அமைப்பாளரான, தெய்வீக மனு அமைத்த சட்டங்கள். இது உண்மை. உங்கள் சொந்தக்காலி லேயே நில்லுங்கள். உங்களால் முடிந்தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கற்றுக்கொள்ளுங் கள். உங்களுக்கு பயனுள்ளவற்றை மட்டுமே எடுத்துக்கொள் ளுங்கள்(பக்.30 – 31).

சுவாமி விவகானந்தரை உலகறியச் செய்த பெருமை தமிழகத்தைச் சாரும் குறிப்பாக ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியைச் சாரும். அதை மேலே குறிப்பிட்டுள்ள முதல் மேற்கோளிலேயே காணலாம்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென்ற விருப்பத்தை முதன்முதலில் தெரிவித்தவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி. 1893 செப்.11 -ஆம் நாள் சிகாகோ மாநாட்டில், சகோதரிகளே, சகோதரர்களே என்று ஆரம்பிக்கும் பிரசித்திபெற்ற உரை நிகழ்த்தினார்.

அதன்பின் நான்காண்டுகள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த சுவாமிஜி, 1897 ஜனவரி 26 -ஆம் நாள் இலங்கை வழியாக தமிழகத்தின் பாம்பனை அடைந்தார். 1897 ஜனவரி 29 -ஆம் நாள் ராமநாதபுரத்தில், அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்தியாவில் ஆற்றிய முதல் சொற்பொழிவின், சுருக்க வடிவமே இந்நூல். இச்சொற்பொழிவின் முற்பகுதியில் தன் நன்றியறிதலை ராமநாதபுர மன்னருக்கு காணிக்கையாக்கு கிறார். விவேகானந்தரின் உயர்ந்த பண்பு இங்கே திகைக்க வைக்கிறது.

பின்னர் இந்து சமயம் உலகிற்கு ஆன்மிக ஒளி காட்டும் தன்மை வாய்ந்தது என்பதையும், துறவின் சிறப்பையும், இந்துக் கடவுள்களின் பெருமைகளையும் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறார்.

இந்துக் கடவுள்கள் மட்டுமே’ எல்லோருக்கும் நன்மை தருகின்ற, மிகுந்த கருணை வாய்ந்த, நம் தந்தையாகவும். தாயாகவும் நண்பனாகவும். நண்பனுக்கு உற்ற நண்பனா கவும், ஆன்மாவின் ஆன்மாகவும் உள்ள கடவுள் – கருத்து இங்கு மட்டுமே உள்ளது.

சைவர்களுக்கு சிவபெருமானாகவும், வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுவாகவும்,.. பௌத்தர்களுக்கு புத்தராகவும், சமணர் களுக்கு அருகராகவும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்க ளுக்கும் ஜெஹோவா வாகவும், முகமதியர்களுக்கு அல்லா வாகவும், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தெய்வமாகவும் அந்த ஒரே கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையும், அந்த இறைவனின் பெருமையும் இந்த நாட்டிற்கு மட்டுமே தெரிந்த உண்மை என்கிறார் சுவாமிஜி .வெளியீடு-ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை.ரூ .10.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top