புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நடத்திய சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஏழாவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை நடத்திய சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை அரசு தலைமை மருத்துவமனை யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சிரம்யா தொடக்கி வைத்துப் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பங்குபெற்ற இந்த சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
பக்க விளைவுகள் ஏற்படுத்தாத சித்த மருத்துவம் இன்றைக்கு ஏராளமான நோய்களை குணப்படுத்தி வருவதையும், நோய் தீர்க்கும் அரிய மூலிகைகளின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் மாணவர்கள் முகாம் நடத்தும் மருத்துவர் களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர்கள் கூறும்போது நாங்கள் தினந்தோறும் சாலையோரங்களில், வீடுகளுக்கு அருகில் காண்கின்ற பல தாவரங்கள் நோய் தீர்க்கும் வரங்களாக அமைந்திருக்கின்றன என்பதை கண்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.
இந்த முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியைப் பற்றி எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் எடுத்துக் கூறுவோம்” என்று தெரிவித்தனர்.
சித்த மருத்துவம் மற்றும் மூலிகைக் கண்காட்சி ஏற்பாடுகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் வனஜா தலைமையில் மருத்துவர்கள் வேங்கட கிருஷ்ணன், மணிவண்ணன், ரெங்கநாயகி, சுயமரியாதை, சுந்தரேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.