கந்தர்வகோட்டை அருகே ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிக் குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை தலைமை ஆசிரியர் ஞானசேகர் அகஸ்டின் தொடங்கி வைத்தார். தெற்கு வாண்டான் விடுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராசா, இடைநிலை ஆசிரியர் ஆரோக்கிய தேவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தேசிய பறவைகள் தினம் குறித்து பேசியதாவது:
இயற்கையின் மிக அழகான படைப்புகளில் பறவைகளும் ஒன்று. சில சமயங்களில் அவை பாா்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சி அளிக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி அவை இந்த பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய காரணிகளாகவும் உள்ளன. சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புறா பந்தயங்கள் வரை பறவைகள் மனிதர்களோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்.
இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழக வனப்பகுதிகளில் கழுகு, கூழைக்கிடா, பருந்து வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, கொக்கு, குயில், அாிவாள் மூக்கன், பாம்புதாரா, நீர்காகம், மயில், ஆந்தை, புறா உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன.
இருப்பினும், நீர்நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் அாிய வகை பறவைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. தேசிய பறவைகள் தினத்தின் முக்கியத்துவம்.
பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், அனைத்து வகையான பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளதால் தேசிய பறவைகள் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பறவைகளின் உயிர்வாழ்வும் நல்வாழ்வும், இயற்கையையும் அவற்றின் வாழ்விடத்தையும் மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்தது. பறவைகளைப் பாதுகாப்பது, வளா்ப்பது, வளா்ப்போருக்கு உாிய ஆலோசனை கள் வழங்குதல், பறவை இல்லையென்றால் மரம் இல்லை.
மரம் இல்லையெனில் மழை கிடையாது..மழை இல்லை என்றால் விவசாயம் இல்லை.விவசாயம் அழிந்தால் மனித குலம் படும்பாடு பெரும்பாடாகிவிடும். ஆகவே பறவைகளை பாதுகாப்போம். பறவைகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு கடமையாகும் என்றார் அவர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் மஞ்சுளா, செல்வமணி, கோமதி,பிரேமா உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.