Close
நவம்பர் 22, 2024 1:40 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம் அமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டில் பேசுகிறார், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம்  அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை 16 வது மாவட்ட மாநாடு சனிக்கிழமை பழைய பேருந்து நிலையத்தில் சமூக மாற்றத்திற்கான அறிவியல் விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கியது.

பேரணியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா தொடக்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஆர்வலர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பி வந்தனர். இப்பேரணி நகர் மன்றத்தில் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டுப் பேரணியை தொடக்கி வைத்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா.

பின்னர் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் க.சதாசிவம் வரவேற்றார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன்  மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார்.

இதில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, ரோஸ் தொண்டு இயக்குனர் ஏ.ஆதப்பன், நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலர் முனைவர். ஆர்.நமச்சிவாயம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

தமிழக அரசு வானவில் மன்றங்களின் மூலம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சென்று வந்த மாணவர்கள் மனோஜ் மற்றும் யோகபிரகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் இரா.ராமதிலகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை
வானவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  இஸ்ரோ சென்று வந்த மாணவர்கள் மனோஜ் மற்றும் யோகபிரகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இரண்டாவது அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க  பிரதிநிதிகள் மாநாடு மாவட்ட தலைவர் ம.வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் க.ஜெயராம்  வரவேற்றார்.

இதில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் சமூக மாற்றத்திற்கான அறிவியல் எனும் தலைப்பில் பேசினார். இதில் கடந்த இரண்டு ஆண்டு களில் நடைபெற்ற அறிவியல் இயக்க வேலைகள் குறித்து மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் அறிக்கை வாசித்தார்.

பின்னர் புதிய நிர்வாகிகளில், மாவட்டத் தலைவராக மு.முத்துக்குமார்,மாவட்ட செயலாளராக ம.வீரமுத்து, மாவட்ட பொருளாளராக த.விமலா ஆகியோரும் துணைத் தலைவர்களாக க.சதாசிவம், இரா. இராமதிலகம், முனைவர் ஆர்.பிச்சைமுத்து, ஈ.பவனம்மாள்,ஆ.செல்வராசு,பெ.புவியரசு.

இணைச் செயலாளர்களாக சி.ஷோபா, க.வடிவேல், மு.சாமியப் பன்,  நூ.ஜெரினா பேகம்,வீ. சண்முகப்பிரியா, க.ரா.ஓவியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெ டுக்கப்பட்ட நிர்வாகிகளை மாநில துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், நிர்வாகி லெ.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

இதில்,தமிழக அரசு வானவில் மன்றங்களை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை மேலோங்க செய்யும் விதத்திலும், அறிவியல் மனப்பான்மை யை மேம்படுத்தும் விதத்திலும் செயல்பட்டுவரும் வானவில் மன்றங்களை அமைத்து கொடுத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு இம்மாநாடு பாராட்டு தெரிவிப்பது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம், அறிவியல் பூங்கா மற்றும் கண்காட்சி கூடம் ஆகியவற்றை அமைத்துதர வேண்டும்.

புதுக்கோட்டை
புதுகையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்கள் தோறும் அறிவியல் பூங்காக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் .
மேலும்,தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லம் தேடி கல்வி மையங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் பணியாற்றும் தன்னார்வலர் களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை அருகில் அமைந்திருக்கும் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளை உள்ளடக்கிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதியதாக ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியை தொடங்க வேண்டும்.

தமிழக அரசு அமைத்துள்ள மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்துபுதுக்கோட்டையை பாதுகாக்கும் வகையில் காகிதப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் மக்களிடம் தீவிர  விழிப்புணர்வு பிரசார பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் சி.ஷோபா  நன்றி தெரிவித்தார்.  மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top