Close
நவம்பர் 25, 2024 12:38 காலை

புத்தகம் அறிவோம்… மண்ணில் உப்பானவர்கள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மண்ணில் உப்பானவர்கள்

(சபர்மதி) ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற சத்தியாக்கிரகிகள் மட்டுமே இந்த (தண்டி) யாத்திரையில் பங்குகொள்ள வேண்டுமென்று காந்தி தீர்மானித்தார். இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாட்டுக்காகத் தன் உயிரையும் தரக்கூடிய கட்டுப்பாடுடையவர்கள்..

சபர்மதி ஆசிரமத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர்கள் எத்தகைய பயிற்சி பெற்றார்கள் என்பது புரியவரும். உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட ஆர்வம்.

1930 ல் சபர்மதி ஆசிரமத்தின் அன்றாட நடவடிக்கையைக் குறிக்கும் சிறு கால அட்டவணை:

காலை 4.00 மணி : துயிலெழுதல்.

காலை 4.15 to 4.45 மணி: பிரார்த்தனை.

5.00 to 6.10: குளியல், உடற்பயிற்சி, வாசிப்பு.

6.10 to 6.30 : காலை உணவு.

காலை 6.30 to 7.00 மணி: பெண்களுக்கான பிரார்த்தனை வகுப்பு.

காலை 7 to 10.30 மணி: உடலுழைப்பு, கல்வி மற்றும் சுற்றுப்புறத்தூய்மை.

காலை 10.45 to 11.15  மணி :உணவு

11.15 to 12 மதியம் : ஓய்வு

12 to 4.30 பிற்பகல்: உழைப்பு பயிற்சி வகுப்புகள்.

4.30 to 5.30 மாலை : பயனுள்ள பொழுதுபோக்கு

5.30 to 6 மணி : இரவு உணவு

மாலை 6.00 to 7.00  மணி : பயனுள்ள பொழுதுபோக்கு

இரவு 7.00 to 7.30 மணி: பிரார்த்தனை.

இரவு 7.30 to 9.00 மணி  அவரவர் பணிகள்.

இரவு 9.00  மணி உறக்கத்திற்கான மணி அடிக்கப்படும்

இதில் எந்த மாறுதலும் யாருக்காகவும் செய்யப்படாது. அதிலும் குறிப்பாக பிரார்த்தனை உணவு நேரத்தில் நேரம் பிசகாமையைக் காந்தி கடுமையாகக் கடைபிடித்தார். இந்த ஆசிரமம்தான் மக்களுக்காக உழைக்கும் காந்தியர்களை உருவாக்கி தேசம் முழுவதும் அனுப்பியது(பக்.43-44).

இன்றைய இந்தியாவில் நடக்கும் ஒழுங்கீனங்களைப் பார்க்கும் , இதற்காகவா உப்புச் சத்தியாக்கிரகம் செய்தார் கள், துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. காந்தியின் தலைமையில் நடந்த உப்புச் சத்தியாக் கிரகத்திற்கு இணையான நிகழ்வுகள் எதுவும் உலகில் நடைபெறவில்லை.

அதைப் பற்றி இன்றைய தலைமுறை அறிய எழுதப்பட்டுள்ள நூல்தான் மண்ணில் உப்பானவர்கள். 3.3.1930 அன்று அதிகாலையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 79 சத்தியாக்கிர கிகளுடன் தொடங்கி, 240 கி.மீட்டர் தூரத்தை 23 நாட்கள் நடந்து 5.4.1930 -அன்று தண்டி கடற்கறையை அடைந்தார் காந்தி.

காந்தியுடன் பயணித்த 79 சத்தியாக்கிரகிகளில் காந்தி மட்டுமே வயதில் மூத்தவர். 61 வயது. மற்றவர்கள் அனைவரும் 47 வயதிற்கு குறைந்தவர்கள்.26 பேர் 25 வயதினர். 24 பேர் 24-16 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள். இந்த யாத்திரையில் கலந்து கொண்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த விட்டல் லீலாதர் தாகூர், வயது 16. தமிழ்நாட்டைச் சேர்ந்த தபன் நாயர் என்ற 25 வயது இளைஞரும் யாத்திரையில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர்களின் தேசபக்திக்கு ஈடு இணையேது.

நூலாசிரியர் சித்ரா சுப்பிரமணியன், தண்டியாத்திரையின் அனைத்து அம்சங்களையும் பதிவு செய்ததோடு ஒவ்வொரு நாளும் நடைபெற்ற நிகழ்வுகளைச் சித்திரமாக்கியும், சில முக்கியமான ஆளுமைகள படமாக்கியும் நமக்குத் தந்திருக் கிறார்.

வேதாரண்யம் சத்தியாகிரகத்தையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார். இந்த போராட்டத்தின் போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களின் பதிவு கண்ணீர் வரவழைக் கிறது.தன்னறம் நூல் வெளி. குக்கூ காட்டுப்பள்ளி வெளியீடு – ரூ.200.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top