Close
நவம்பர் 22, 2024 3:02 காலை

புத்தகம் அறிவோம்… ஹிட்லர்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- ஹிட்லர்

ஹிட்லர் ஒழுக்கத்தில் சிறந்தவன். அதனாலேயே இவனிடத்தில் தன்னம்பிக்கையும், கண்டிப்பும் நிரம்பி இருக்கின்றன. இவன் சிகரெட் முதலியன உபயோகிப் பதில்லை.

மதுபானம் அருந்தியதில்லை. மாமிசத்தை கையினால் தொடுவதில்லை. இவன் உண்ணும் மரக்கறி ஆகாரமும் சாதாரண குடியானவர் களின் ஆகார வகை போலவே இருக்கும்.

பல தினுசுகள்  ரொட்டி, பழம், பால், பருப்பு தினுசில் ஒன்று ஆகிய இவற்றோடு திருப்தியடைந்து விடுவான். இந்த எளிய உணவையும் தனியாக உட்கார்ந்து சாப்பிட மாட்டான். யாராவது இரண்டொரு நண்பர்களை வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவான்.(பக். 383).

காதலை வடிவமாகப் பெறாத இவன், குழந்தைகளிடத்தில்-அவை யாருடைய குழந்தையாயிருந்தாலும் அன்பாகப் பேசுவான். அவைகளோடு வேடிக்கைச் செய்வான். ஓடி விளையாடுவான்.

குழந்தைகளிடத்தில் இவன் வைத்திருக்கும் அபாரமான பிரீதியைக் கண்டே, தேச மக்கள்,இவனுடைய 47 -வது பிறந்த தினக் கொண்டாடத்தின் போது (20.4.1936) சுமார் ஆயிரம் தொட்டில்கள் வாங்கிக் கொடுத்தனர். இவையனைத் தையும் ஏழைக் குழந்தைகளின் உபயோகத்திற்கு கொடுத்து விடுமாறு உத்தரவு செய்தான்.

ஹிட்லர், பிறருடைய தயவுக்காகவோ, தாட்சண்யத்துக்காக வோ எதையும் செய்யமாட்டான். சிறப்பாகப் பொதுப்பணத் தை கையாடும் விஷயத்தில் மிகவும் சிக்கனமாகவும், கண்டிப்பாகவும் இருப்பான்.

1923 ஆம் ஆண்டு புரட்சியின்போது இவனோடு மாறுபட்ட வான் கார் என்பவனே” நான் ஹிட்லரோடு எல்லா விஷயங் களிலும் ஒற்றுமையான அபிப்ராயம் கொள்ளவில்லை. ஆனாலும் அவன் மிகவும் நாணயஸ்தன் என்பதை நான் மறுக்க முடியாது.

அரசாங்க தோரனையிலோ, தனிமுறையிலோ யாரும் பேச வருவார்களானால் அவர்களை எழுந்து நின்று வரவேற்பான். அவர்கள் விடை பெற்றுச் செல்லும்போது, கூடவே தொடர்ந்து கொஞ்ச தூரம் வந்து வழிவிடுவான்; தலைவணங்கி வந்தனம் கூறுவான்.

இவனுடைய உடை, பாவனை இரண்டையும் பார்த்தால், ஒரு சாதாரண கீழ்த்தர உத்தியோகஸ்தனுக்கும் இவனுக்கும் எந்த வேற்றுமையும் காணப்படாது. மற்றெல்லா வகையிலும் போலவே, உடையிலும் ஆடம்பரமில்லாதவனே.

சர்வாதிகாரி – ஆயினும் மனிதன் – அத்தியாயம் – 25.(பக்.384-85)தமிழ் மக்களை அறிவாளிகளாக ஆக்க வேண்டும் என்ற நோக்கில் புத்தகங்களை படைத்தவர் சாமிநாத சர்மா” என்பார் கவியரசு கண்ணதாசன்.அந்த வெங்களத்துார் சாமிநாத சர்மாவின் (செப்.7 1895-ஜன.7, 1978) நினைவு தினம்,
இன்று.

வெ.சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே பிரசுரிப்பது என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். அதன் மூன்றாவது புத்தகம் இது. இது அக்டோபர், 1936ல் முதல் பதிப்பு கண்டது. பர்மா தலைநகர் ரங்கூனில் வெளியிடப் பட்டது.

இங்கே பதிவிட்டிருப்பதும் அந்த பதிப்பே. 1985 -ல் பூலாங் குறிச்சி வ.செ. சிவ. அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த போது நான் தங்கியிருந்த வீட்டின் செட்டியார் எனக்குத் தந்தது.

இந்த நூல் இரண்டாவது உலகப்போர் துவங்குவதற்கு 3 ஆண்டு களுக்கு முன்பு , ஹிட்லர் வாழும் காலத்தில் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் போர் மேகம் சூழ்ந்து கொண்டிருந்த காலம் அது.

சர்மா ஹிட்லரைப் புகழ்ந்து எழுதியது போல இந்த நூல் இருக்கும். அதற்கு சர்மா இப்படி விளக்கம் தருகிறார். தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து, குற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்பும் பலர் ஹிட்லர் தான் இந்த நிலைமைக் கெல்லாம் காரணம் என்று கூறுகின்றனர்.

இந்தத் தீர்ப்பு சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்க லாம்.  தீர்ப்பு கூறுவது இந்த நூலின் நோக்கமல்ல. ஜெர்மனியின் கட்சியை ஹிட்லருடைய நோக்கத்தை எடுத்துரைப்பதுதான். இதனால் ஹிட்லரை அங்கீகரிப்ப தாகவும் ஆகாது. அவனை குறை கூறுவதாகவும் ஆகாது.

இந்நூல் வழி ஜெர்மனியின் வரலாற்றை மட்டுமல்ல ஐரோப் பாவின் வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம். தேர்ந்த வரலாற்று ஆசிரியர் போல் விரிவான ஆதாரங்களோடு, இன்றைக்கு இருக்கும் வசதிகள் இல்லாத காலத்தில் இதை எழுதியிருக்கிறார் சர்மா. நூல் முழுவதும் ஹிட்லரை ‘அவன்’ ‘இவன்’ என்றே விளித்திருப்பார். நல்ல வேளை சர்மா அப்போது பர்மாவில் இருந்தார்.

சர்மாவின் நூல்கள் யாவற்றையும் “வளவன் பதிப்பகம்” தொகுப்பாக வெளியிட்டுள்ளது. சர்மாவிற்கு குழந்தைகள் கிடையாது. “இவருடைய நூல்கள்தான் எங்கள் குழந்தைகள்” என்பார் சர்மாவின் துணைவியார். அந்தக் குழந்தைகள் தமிழ்ச் சமுகத்திற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் அறிவுச் செல்வத்தை வழங்கிக் கொண்டிருக்கும்.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top