புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவப்பொங்கல் விழா சனிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது..
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத் திங்கள் முதல்நாள் தமிழர் திருநாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ் சமுதாயம் கொண்டாடும், பொங்கல் விழா ஜாதி, மத, இன வேறுபாடுகள் எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டு திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திருவிழாவாக, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.
பொது இடங்களில் இடங்களில் அழகுபடுத்தி அனைவரும் அங்கு கூடி வீடுகள் தோறும் புதுப் பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும். மகளிர், இளைஞர் திறம்விளங்க கோலப் போட்டிகளையும், வீர விளையாட்டுக ளையும் ஆங்காங்கே நடத்துவதுடன். கிராமப்புற நடனங்க ளும், மற்ற கலை நிகழ்ச்சிகளும், நடத்தி விருதுகளும், பரிசு களும் வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி, திருமயம் ஒன்றியத்தைச்சார்ந்த பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவப்பொங்கல் விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் எம். சிக்கந்தர் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. இதில், துணைத்தலைவர் சையதுரிஸ்வான், ஊராட்சி உறுப்பினர்கள் எஸ். முத்துலட்சுமி, வி. ஆனந்தி, சி. செல்வராணி, எம்.ஏகம்மை, கே. காந்திமதி, பி.ரத்தினம், எம். பழனியப்பன், வி. வீராச்சாமி, ஏ.சூசைராஜ்அறிவுமணி, எம். வீரமணி, ஜெ. பாண்டியம்மாள், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட கோலமிடும் போட்டி, கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
கோட்டையூர் ஊராட்சியில்… ஊராட்சித்தலைவர் எம். ராமதிலகம் தலைமையில் சமத்துவப்பொங்கல் வைக்கப்பட்டது. இதில், துணைத்தலைவர் ஜி.மங்களராமன், உறுப்பினர்கள் வி.சித்ரா, எம்.வளர்மதி, காசிஅர்ச்சுணன், இ. விக்டோரியா, ஆர்.கவிதா, எம். சரவணன், பா.ரஞ்சனி. எஸ். பாண்டியன், ஊராட்சிச்செயலர் பானுமதி, ஒன்றியக்குழு உறுப்பினர் சி. வளர்மதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் கிராம பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊராட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.
இதே போல திருமயம் ஒன்றியத்திலுள்ள 33 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சித்தலைவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.