Close
நவம்பர் 22, 2024 5:57 காலை

திரைப்பார்வை.. . கிடா திரைப்படம்

திரைப்பார்வை

கிடா திரைப்படம்

 கிடா படத்தின் திரை விமர்சனம்..
என் வாழ்நாளில் நான் பார்த்து ரசித்த, உணர்வு பூர்வமான திரைப்படங்களில் ஒன்று. செல்லையா (மறைந்த நடிகர் ‘பூ’ ராம் – அந்த கலைஞனுக்கு நம் நினைவஞ்சலி).

மரம் ஏறும் தொழில் செய்து ஓய்வு பெற்ற ஒரு ஏழை தொழிலாளி, அவரது பேரன் கதிர் (மாஸ்டர் தீபன்) ஆகிய இருவரும் கருப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் தங்களது ஆட்டை விற்க விரும்பிய போது, அதை வாங்க வரும் கசாப்புக் கடைக்காரன் வெள்ளைச்சாமியின் (காளி வெங்கட்) வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

செல்லையா தனது சொந்தக் குழந்தை போல் அந்த ஆட்டை வளர்த்து வருகிறார். அவரது பேரன் கதிர் அதை முழு மனதுடன் தனது உடன்பிறப்பு போல நேசிக்கிறான்.

பேரனுக்கு தீபாவளிக்காக புது ஆடை வாங்க பணம் இல்லாததால், செல்லையா வேறு வழியின்றி தனது ஆட்டை கசாப்பு கடைக்காரரிடம் விற்க முடிவு செய்கிறார். தன்னால் இயன்றவரை முயற்சி செய்தும், பண்டிகையை கொண்டா டுவதற்கு கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் படி தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை. பண்டிகைக்கு புதிய ஆடை மற்றும் பட்டாசு வாங்குவதற்கு தாத்தாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் பேரன், தீபாவளி நெருங்க நெருங்க ஏமாற்றப்பட்டதாக உணர்கிறான்.

தன் பேரன் விரும்பி கேட்டதை வாங்கி தர முடியாத விரக்தி யில் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக தனது ஆட்டை கனத்த மனதுடன் விற்க செல்லையா முடிவு செய்கிறார். இதை அறிந்த அந்த ஏழை சிறுவனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும் ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்க வேண்டாம் என்று தனது தாத்தாவிடம் கெஞ்சுகிறான்.

இதற்கிடையில் வெள்ளைச்சாமிக்கு தீபாவளி அன்று தனது சொந்தத் தொழிலைத் தொடங்க ஒரு ஆடு தேவைப்படுகிறது. அவர் தனது முதலாளியிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு, தான் பார்த்த வேலையில் இருந்து வெளியில் வருகிறார். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த அவர் சொந்தமாக தீபாவளி அன்று தனது கசாப்பு தொழிலைத் தொடங்க விரும்புகிறார். அதற்காக வெள்ளைச்சாமி ஆடு வாங்க பணத்துடன் வரும் போது செல்லையாவின் கருப்பு கிடாவை காணவில்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கிடா படத்தின் கதை.

கருப்பு என்கிற ஆடு படத்தில் முக்கிய கதாபாத்திரம். கிடா என்பது ஒரு சிறுவனின் உளவியலை, அவனை சுற்றிய நிகழ்வுகள்தான் திரைக்கதையாக பின்னப்பட்டிருக்கிறது. பூ ராமு மற்றும் காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை முழுமையாக நியாயப்படுத்தி தங்கள் வழக்கமான நடிப்பை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

காளி வெங்கட்டின் மனைவியாக வரும் லட்சுமி, பாட்டியாக நடித்துள்ள பாண்டியம்மா இவர்கள் இருவரின் வெள்ளந்தி மனசு, கறிக்கடை நடத்துகிற முகமதியரின் பெருந்தன்மை மனதை தொடுகிறது.

ஒரு திருவிழாவைக் கொண்டாடுவதன் நுணுக்கமான அம்சங்களை, குறிப்பாக நமது கலாசார அமைப்பில், அதில் இணைக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் உணர்வு பூர்வமான மதிப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது. அற்புதமான கதை மற்றும் திரைக்கதையாக இருந்தாலும், இயக்குனரின் முத்திரை ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக பதிய வைக்கப் பட்டிருக்கிறது.

பின்னணி இசை மற்றும் நாட்டுப்புற பாணியில் அமைக்கப் பட்ட தலைப்புப் பாடல் பார்வையாளர்களை ஒவ்வொரு காட்சியிலும் ஆழமாக ஒன்றிப்போக வைக்கிறது.

தேவைகளின் போது பரஸ்பர மனித உதவி மற்றும் சுற்றியுள்ளவர்களின் அன்பின் அடிப்படையில் அனைத்து தார்மீக அம்சங்களின் வளமான பாரம்பரிய வாழ்வாதாரத்தை மிக அழகாக இந்த படம் உரக்க சொல்கிறது.

ஒரு எளிய கதையின் மூலம், வாழ்க்கையின் அனைத்து அடிப்படை மனித அம்சங்களையும் முன்னிறுத்தும் வகையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய திரைப்படம், குறிப்பாக பண்டிகை யதார்த்தத்தை அதன் தூய்மையான வடிவத்தில் ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். இந்த பண்டிகைகள் பலருக்கு மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் தான் அந்த நாளை கழிக்கிறார்கள்.

எல்லாம் நடக்கும் என்று நம்பினால் எல்லோருக்கும் ஒரு வழி இருக்கிறது, நல்லது நடக்கும் என்று சொல்லி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரா.வெங்கட். 2023 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும்.

அறியப்படாத கலைஞர்களை வைத்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் இது போன்ற ஒரு அற்புதமான திரைப் படத்தை உருவாக்கிய குழுவிற்கு பாராட்டுகள்.

துரதிருஷ்டவசமாக பெரும்பாலான பெரிய பொருட் செலவில் தயாரித்து வெளிவருகிற திரைப்படங்கள் இரத்தம் தோய்ந்த வன்முறையை, வன்மத்தை கலையாகக் காட்டுகின்றன.

அதில் கிடா போன்ற படங்களை மக்கள் பார்த்தால், மனிதர் களுக்குள் இருக்கும் மகத்தான மனிதம் வெளிக்கொணர்ந்து,
மனிதனுக்கு மனிதன் பேருதவியாக இருக்கும் மானுடத்தின் மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை இரண்டு மணி நேரத்தில் ஒரு சிறந்த செய்தியை நமக்குத் தருகிறது.

கிடா படத்தை பார்த்து முடித்த பிறகு நாம் ஆட்டிறைச்சி சமைப்பதை, சாப்பிடுவதை நிறுத்தப் போவதில்லை. பண்டிகை கொண்டாட்டம் குழந்தைகளுக்கானது.

பண்டிகை கொண்டாட்டத்தால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது என்று யோசிக்கையில், உற்சாகம் கொள்வதற்கான நாளாக, உறவுகளுடன் கழிக்கும் நாளாக தான், நாம் பார்க்கிறோம்.

பொருளாதார ரீதியில் வலுவிழந்த நமக்கு தெரிந்த, நமக்கு தெரியாத, யாரோ ஒருவருடைய குழந்தைக்கு நம்மால் இயன்றதை செய்ய நமக்குள் ஒரு உளவியல் மாற்றத்தை, வாழ்வின் மீதான பிடிப்பை இந்த படம் நிச்சயம் தரும்.

நம்மில் தொடங்கிநம்மில் முடிவதல்ல வாழ்க்கை.நேரம் வாய்க்கும்போது,கண்டிப்பாக பாருங்கள்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top