கான கந்தர்வன் என்ற பாராட்டுக்கு முற்றிலும் ஏற்ற இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான கே.ஜே. ஜேசுதாஸ் (10.1.2024) தனது 84 வது பிறந்த நாளை கொண்டாடினார் .
10.1.1940 -ல் பிறந்த யேசுதாஸ் ஏறத்தாழ 60 வருடங்களுக்கு மேல் அற்புதமான கலைச்சேவை புரிந்து வரும் மாமேதை. பாரம்பரிய கர்னாடிக் இசை, பக்திப் பாடல்கள், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து இசை மழை பொழிந்து, இதயங்களை இனிமை வெள்ளத்தில் நனைத்து மகிழ்விக்கும் இசை வேந்தர்.
சுமார் 50,000 பாடல்கள் பாடி சாதனை புரிந்த இவருக்கு 8 முறை தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், இந்திய நாட்டின் உயர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவர் குரலில், குழைவு , குளிர்ச்சி, மலர்ச்சி, இனிமை, ஜிலுஜிலுப்பு, நெகிழ்வு, நயம், உற்சாகம், உள்ளத்தைத் தொடும் உருக்கம் என்று ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் அளவின்றி நிறைந்திருக்கும்.
இவரது பாடல்களில்ஆக பெரும்பான்மையானவை, மனதை மயிலிறகால் வருடும் மெல்லிசையோ, இதயத்தை இளக வைத்துக் கண்களை குளமாக்கும் சோகக் காவியமோ, சிங்கார ரசம் பொங்கி வழிந்து சிந்தும் இசைக் கோலமோ, சிலிர்க்க வைக்கும் உணர்ச்சி வெள்ளமோ என்ற வகையில் தான் இருக்கும்.
மென்மையான குரலில் இவர் இசைத்த தாலாட்டுப் பாடல்களைக் கேட்டால், எந்த வயதினரும் அமைதியாக, ஆனந்தமாக நித்திரை கொள்வார்கள். ரம்மியமான காதல், மகிழ்வு பாடல்களை இவர் கொஞ்சும் குரலில் கேட்டால், உண்மையிலேயே காதில் தேன்மழை பொழியும்.
வருத்தம் தோய்ந்த இன்னிசைக் காவியங்களை இவர் வழங்கும் போது, நெஞ்சம் கனக்கும் , கண்கள் பனிக்கும், சொல்ல முடியாத வேதனை வாட்டும். தெய்வீகப் பாடல்கள் பக்தி பரவசத்தையும், இறை உணர்வையும், இதயத்தில் இருத்தி மன அமைதி பெற வழி வகுக்கும்.
பாரம்பரியப் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் விதம் விதமாக, ராக தேவதைகளை அலங்கரித்து, அழகுட்டி, ஆராதித்து, இசை வேள்வி நடத்தும் போது, மெய்சிலிர்க்கும் சுகானுபவமாயிருக்கும். இசை மேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..,
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎤🎧 #