Close
அக்டோபர் 5, 2024 10:31 மணி

மருத்துவத்துறையில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சுகாதாரப் பேரவை கூட்டத்தில் வாழ்த்துமடல் வழங்குகிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், 3-வது மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின்கீழ், 3-வது மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் (20.01.2024) நடைபெற்றது.

பின்னர், சட்டத்துறை அமைச்சர் பேசியதாவது:

மருத்துவத்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் பல்வேறு மருத்தவம் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த திட்டங்களின் மூலம் பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 3-வது மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

பொது மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மருத்துவத்து றைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மருத்துவர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 26.08.2021 அன்று முதல் பேரவை கூட்டமும், 03.03.2023 அன்று இரண்டாவது மாவட்ட சுகாதார பேரவை கூட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றையதினம் மூன்றாவது சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற சுகாதாரப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றோர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 07.05.2021 முதல் 15.11.2023 தேதி வரை ரூபாய் 88 கோடியே 99 இலட்சம் மதிப்பீட்டில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்புகள், துணை சுகாதார செவிலியர் குடியிருப்புகள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவை கட்டி முடித்து முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, மாவட்ட சுகாதார பேரவை மூலம் பெறப்பட்ட கோரிக்கைகள் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க அரசுக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், கூடுதல் ஆய்வக உபகரண வசதிகள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., இரத்த வங்கிட ஆய்வகங்கள், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவைகள் பெறப்பட்டு, மாவட்ட சுகாதார பேரவை மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற சுகாதார சேவைகளை மேம்படுத்திடும் விதமாக ஏற்கெனவே உள்ள இரண்டு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் கூடுதலாக ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அசோக் நகர் பகுதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

மேலும் நகர்ப்புற சுகாதார சேவைகளை மேம்படுத்தும் விதமாக காந்திநகர் மற்றும் மாலையீடு பகுதிகளில் நகர்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது

காமராஜபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு ரூபாய் 60 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்களும், மச்சுவடி மற்றும் ராஜகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு நகர்ப்புற துணை சுகாதர நிலையங்கள் ரூபாய் 60 லட்சம் செலவில் கட்டிடங்களும் அமைக்க பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் ஒன்று 25 இலட்சம் செலவில் அமைக்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளது

கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், பிறப்பு விகிதம், குறைவான எடையுள்ள குழந்தைகள் பிறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் ஆகிய குறியீடுகள் குறைக் கப்பட்டு தரமான சேவைகள் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிக்க தொடர் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய தரச் சான்று விதிகளின் கீழ் 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகள் தேசிய தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 05.08.2021 மகளிர் மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டு 13,03,130 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொடர் சிகிச்சைகளின் மூலமாக 3,45,552 நபர்களுக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகிய பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 32,126 பயனாளிகள் ரூபாய் 38 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் செலவில்பயனடைந்துள்ளனர்.

இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகள், 5 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைந்து, இதுவரை ரூபாய் 2 கோடியே 26 லட்சத்து 78 ஆயிரம் செலவில் 2,993 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 2023-ஆம் ஆண்டில் 4,510 மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 3,617 மாணவ, மாணவியர்களுக்கும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின்கீழ், 2023-ஆம் ஆண்டில் 20,849 கர்ப்பிணி பெண்களுக்கு 12 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 18,073 கர்ப்பிணி பெண்களுக்கு 10 கோடியே 80 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ், 2023-ஆம் ஆண்டில் 39 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 38,266 நபர்களும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 39 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 39,409 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

எனவே  தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கொண்டு சேர்த்து பயனடைய செய்ய வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.

பின்னர்,  தமிழ்நாடு முதலமைச்சர் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 10 புதுமைப் பெண் திட்ட பயனாளிகளான மாணவிகளுக்கு வாழ்த்துமடல் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து,  சட்டத்துறை அமைச்சர் , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு வாழ்த்துமடலை  வழங்கினார்.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் .இரா.மணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி,

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை),

நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), வி.ராமசாமி (அன்னவாசல்), நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top