அறம் செய்ய விரும்புவதை அடிப்படையாகக் கொண்டதுதான் அறநிலையங்கள் என்றார் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சவேரியார்புரத் தில் திங்கள்கிழமை நடைபெற்ற முருகப்பா குழுமத்தின் ஏஎம்எம் அறநிலையத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று ப.சிதம்பரம் மேலும் பேசியதாவது:
கடந்த 1924 -ல் தொடங்கப்பட்ட முருகப்பா குழுமத்தின் அமுமு அறநிலையம் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. தொழிலில் கிடைக்கும் வருமானத்தை அறநிலையத்தில் முதலீடு செய்து அதன் மூலம் பல்வேறு அறப்பணிகளை செய்து வருகின்றனர்.
அறம் செய்ய விரும்பு. விரும்பினால் அறம் செய்ய முடியும். அறம் செய்ய விரும்புவது என்பதுஅறநிலையத்தின் அடிப்படை சூத்திரம். அதை நிறைவேற்றுவதற்காகவே அறநிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.
எடுக்க எடுக்க நீர் சுரப்பதைப் போல கொடுக்கக்கொடுக்க நிறைய செல்வம் வந்து சேரும் என்பதற்கு அமுமு குழுமம் நல்ல உதாரணம். நூற்றாண்டை முன்னிட்டு பெருநிறுவன சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் பள்ளத்தூரில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
அதில் பரிசோதனை, புறநோயாளிகள் கட்டடம் உள்ளதைப் போல உள்நோயாளிகளுக்கும் கட்டடம் அமைத்து முழுமையான மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு கல்வி, மருத்துவத்தில் முன்னேறி இருக்கிறது. ஆனால் நமது(சிவகங்கை) மாவட்டத்தில் மருத்துவத்தில் பின்தங்கியே இருக்கிறோம். எனவே, கல்வி, மருத்துவத்தில் அமுமு அறநிலையம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இங்கு முருகப்பா அறிவியல் மையம் இன்று தொடங்கப் பட்டுள்ளது. மரபு, மதம், கலாசாரம் முக்கியம். அதைவிட அறிவியல் மிக மிக முக்கியம். கடந்த 200 ஆண்டுகளில் அறிவியல் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்த 200 ஆண்டுகளில் அறிவியல் எந்த அளவுக்கு முன்னேற்றம் காணும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
இந்த அறநிலையம் சார்பில் கல்வியும், மருத்துவமும் இந்த செந்தமிழ்நாட்டுக்கு பயன்தரவேண்டும். அதேபோல இந்த அறிவியல் மையம் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்றார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் முருகப்பா குழுமத்தின் ஏ.எம்.எம். அறநிலையம் சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தில் (சி.எஸ்.ஆர்.) ஏ.எம்.எம். மருத்துவமனையில் நூற்றாண்டு வளாக கட்டடத்தை விழா மேடையில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம்பிரேம்ஜி திறந்து வைத்து பேசுகையில்,
களத்தில் முன்நின்று ஆற்றகிற மருத்துவ சேவையை நாம் எந்த அளவிலும் செய்யலாம். அறத்தில் சிறியது பெரியது என எதுவும் கிடையாது. அறம் என்பதை அளவீடு செய்ய முடியாது. காந்தி இதைத்தான் செய்து காட்டினார் சமூக சேவையை அதிகமாக எதிர்பார்க்கும் சமூகத்தில் இருக்கும் நாம் சமூக சேவையை செய்து கொண்டிருக்க வேண்டும்.
பெண்களுக்கு சமூக பொருளாதார சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தார்கள். கடந்த 20 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் செயல்பாடு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அறிவார்ந்த இளைஞர் சமுதாயம் உருவாக அடிப்பையாக இருந்து வருகிறது என்றார் அசிம் பிரேம்ஜி.
அறநிலைய நிர்வாக அறங்காவலர் எம்.ஏ. அழகப்பன் ஏ.எம்.எம். அறக்கட்டளையின் கடந்த கால சேவை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், “ஏ.எம்.எம். அறக்கட்டளையானது பள்ளிகள், மருத்துவமனைகளை நிறுவி, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தளங்களில் எங்களின் இலக்குகளை அடைய முடிகிறது.
மேலும் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதார சேவைகளை விரிவுப்படுத்தி உதவ முடிகிறது. நாங்கள் செய்யும் சேவை சமூகத்தை மீண்டும் சென்றடைந்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம். நூற்றாண்டு விழா சேவை செய்யும் உறுதிப்பாட்டை புதுப்பிக்க வாய்ப்பளிக் கிறது என்றார் அவர் .
இதையொட்டி, ஏ.எம்.எம். அறக்கட்டளை பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பாரம்பரியமாக நடத்தி வருவதை நினைவுகூறும் வகையில், வரலாற்றறிஞர் வி.ஸ்ரீராம் எழுதிய A Century of Service (நூற்றாண்டு கால சேவை) என்ற தலைப்பிலான காஃபி டேபிள் புத்தகத்தின் முதல் பிரதியை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி வெளியிட முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். முன்னதாக அமுமு அறநிலைய நிர்வாகி சுப்பையா வரவேற்றார். நிறைவாக மீனாட்சி முருகப்பன் நன்றி கூறினார்.