கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குளறுபடி களைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கள்களின் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, க.ரெத்தினவேல், ஆர்.சுப்பிரமணியன், எல்.ஹேமா, அப்துல்கலாம், ரேணுகாதேவி, எம்.கீதா உள்ளிட்டோர் பேசினர்.
ஆன்லைன் சான்றாவனங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர் சான்றாவனங்கள் அழிக்கப்பட்ட தற்கான காரணங்களை ஆய்வு செய்து, குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய வரும் தொழிலாளர்களின் ஒருநாள் வேலை இழப்பை ஈடுசெய்யும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆன்லைன் பதிவுடன் மனுக்களை நேரடியாகவும் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணம் செய்யும் தொழிலாளர்களின் வாரிசுகளில் இருவரும் தொழிலாளியாக இருப்பின் இருவருக்கும் பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டன.