Close
அக்டோபர் 5, 2024 8:13 மணி

புத்தகம் அறிவோம்… தமிழ வள்ளலார்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தமிழ வள்ளலார்

உண்மையே கடவுள்.வாய்மையே கடவுள்.  ஜனவரி 30, இந்தியாவில் தோன்றிய இரண்டு மகான்களின் நினைவு நாள். ஒருவர் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். மற்றவர் காந்தி அடிகள் என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

முன்னவர் மறைந்தது 1874 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை. பின்னவர் 1948 ஜனவரி 30 வெள்ளிக்கிழமை. இருவர் பிறப்பின் மாதமும் ஒன்று. 1823 அக்டோபர் 5 .1869 அக்டோபர் 2.வள்ளலார் மறைந்த போது காந்திக்கு வயது 5. காந்தி வள்ளலாரின் மறு அவதாரம் என்பார் “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ” என்ற நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் ( இந்த நூலுக்காக ம.பொ.சி. சாகித்ய அகாதமி பெற்றார்)  இருவருக்கிடையில் நிலவிய கருத்தொற்றுமை களை கீழ்கண்டவாறு ம.பொ .சி. கூறுகிறார்.

சாதி வேற்றுமைகள் அடியோயோடு தொலைய வேண்டும். உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதி அவற்றின் பால் அன்பு செலுத்த வேண்டும்.பட்டினி தொலைந்து பாரிலுள்ள அனைவோரும் பசியாற உண்ண வேண்டும்.

ஒரு விஷயத்தில் மட்டும் வள்ளலாரிடமிருந்து காந்தியடிகள் வேறுபட்டார். அதாவது மதங்களற்ற மனித சமுதாயம் காண விரும்பினார் வள்ளலார். காந்தியடிகள் மதங்களை அழிக்கா மல் அவற்றிடையே ஒருமைப்பாடு காண முனைந் தார். இதனை முரன்பாடுடைய வேற்றுமையாக கொள்ளத் தேவையில்லை என்கிறார் ம.பொ.சி.(வள்ளலார் கண்ட  ஒருமைப்பாடு.பக். 528. )

தஞ்சையார்  என்று அழைக்கப்படும், மூத்த வழக்குறைஞர் தஞ்சை ராமமூர்த்தி எழுதியுள்ள  தமிழ வள்ளலார்.
வள்ளலாரைப் பற்றி அறிய உதவும் சிறந்த நூல்களில் ஒன்று.

இந்த நூல் மூன்று முக்கிய அத்தியாயங்ளைக் கொண்டது.
முதல் அத்தியாயம் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு. இரண்டாது வள்ளலாரின் கோட்பாடுகள், தோற்றுவித்த அமைப்புகள். மூன்றாவது, வள்ளலார் நாத்திகரா என்ற விவாதத்தோடு பாரதியார், பெரியாரோடு ஒப்புமை.

‘தமிழ’ என்பது தமிழின மரபு, தமிழ்மொழி முதலிவற்றின் சார்பாக உள்ள செய்திகளைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. “தமிழச் சாதியே ” என்கிறார் பாரதி. அதையே , முத்தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்த வள்ளலாருக்காக எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார் தஞ்சையார்.

128 பக்கம் உள்ள இந்த நூலை எழுதுவதற்குதிருவட்பா ஆறுதிரு முறைகள், உரைநடைப்பகுதி கடிதங்கள்,ம.பொ.சி. யின் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,ஊரன் அடிகளின் ‘இராமலிங்க அடிகள் வரலாறு, பாலகிருஷ்ண பிள்ளையின் 12 நூல்கள் யாவற்றையும் முழுமையாகப் படித்ததாக சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் தஞ்சையார்.

பாரதியாரின் அறச்சீற்றமும்,பெரியாரின் கொள்கை முழக்கமும் வள்ளலாரின் சன்மார்க்கத்தின் மூலம் விளைந்ததே என்கிறார் தஞ்சையார். “சுயமரியாதை இயக்கத்திற்கு காஞ்சிபுரம் மாநாடே காரணமாக அமைந்தது என்றாலும் அதன் மூலமாக அமைந்தது சன்மார்க்க சங்கமே ” என்ற திரு.வி.க வின் கருத்தை இங்கே மேற்கோள் காட்டுகிறார்.

வள்ளலாரை முழுமையாக அறிய இரத்தினச் சுருக்கமான இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.அருட்பெருஞ் ஜோதி..அருட்பெருஞ் ஜோதி… தனிபெருங் கருணை. அருட் பெருஞ் ஜோதி.பசித்திரு..தனித்திரு..விழித்திரு. வள்ளலார். வெளியீடு-பன்மை வெளி,சென்னை-94439 18095.விலை ரூ. 100.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top