புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (31.01.2024) நேரில் பார்வையிட்டு அனைத்துத்துறை அரசு அலுவலர் களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடை வதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் , ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார். அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு,
பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவு படுத்து தல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறை களைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
அந்தவகையில், பொன்னமராவதி வட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு அரசுத் துறைகளின் பணிகள் பார்வையிடப்பட்டது.
அதன்படி, ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கல்வித் தரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், மேம்படுத் தப்பட்ட பள்ளி வகுப்பறையில் குழந்தைகளுக்கு வழங்கப் படும் கற்றல், கற்பித்தல் திறன்கள்,
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுவது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் உணவு அட்டவணையின்படி சரியான நேரத்திற்குள் காலை உணவு வழங்கப்படுவது, இருப்பு பதிவேடு உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ஆலவயல் கிராம நிர்வாக அலுவலகத்தின் செயல் பாடுகள் குறித்தும், ஆலவயல் கால்நடை மருந்தகத்தில், மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை குறித்தும், ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் விநியோகம் செய்யப்படும் குடிமைப் பொருட்களின் இருப்பு, தரம் குறித்தும்,
ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, டாம்கோ கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் லெப்பை மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.8.46 இலட்சம் மதிப்பில் கடனுதவித் தொகை வழங்கப்பட்டது.
மேலும், அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மருந்துப் பொருட்களின் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறைக்கு சென்று தாய்மார்களிடம் தங்களுக்கு வழங்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, தாய்மார்க ளுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
அம்மன்குறிச்சி ஊர்புற நூலகத்தில் புத்தகங்களின் இருப்புகள், வாசகர்களின் வருகைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப் பட்டது.
உலகம்பட்டி முதல் கண்டியாநத்தம் வரை புதுப்பட்டி வழியாக செல்லும் சாலை முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.82.05 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மற்றும் கண்டியாநத்தம் முதல் கருமங்காடு வரை செல்லும் ஓரடுக்கு மெட்டல் சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.27.22 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மேலைச்சிவபுரி கணேசர் அறிவியல் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடப் பட்டது.
அதனைத்தொடர்ந்து, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவல கத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள், சேவைகள் உள்ளிட்டவைகள் விரைவாக சென்று சேர்வதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பேருந்துநிலையத்தில் அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கான பேருந்து தகவல் பலகைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் மற்றும் வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு பதிவேடுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை பதிவேடுகள், அடிப்படை வசதிகள், நோயாளிகள் தங்கும் இடம் உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
எனவே தமிழக அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பொதுமக்கள் பெற்றிடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா.
இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே.சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ஆர்.ரம்யாதேவி (காவிரி-வைகை-குண்டாறு), இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.