மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜசேகரன் மறைவிற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றியவர் எஸ்.ராஜசேகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றியவர்.
இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் 2006 முதல் 2011 ஆம் வருடம் வரை ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பிரதிநிதியாக திறம்பட பணியாற்றியவர் எஸ்.ராஜசேகரன்.
காவிரி, வைகை, குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு பெற்று தந்தது, கரம்பக்குடியை தனி தாலுகாவாக அமைய காரணமாக இருந்தவர். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத் திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களுக்கான ஏராளமான கோரிக்கைகளை வென்றெடுத்தவர் எஸ்.ராஜசேகரன்.
கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ராஜசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த குலமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற்றது.
இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாநில குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை,
திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் க.சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் த.புஷ்பராஜ், உலகநாதன், திருஞானசம்பந்தம், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்ட செயலாளர் த.செங்கோடன், முன்னாள் மாவட்ட செயலாளர் மு.மாதவன்,
சிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, திருவரங்குளம் ஒன்றியப் பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஞான.இளங்கோவன்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்கள், இடதுசாரிக் கட்சித் தோழர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்னோர் அஞ்சலி செலுத்தினர்.