வடசென்னைத் தமிழ்ச் சங்கம் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
வி.ஜி.சந்தோசம், கவிதைப்பித்தன், முனைவர் மு. முத்துவேலு, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்), புதுவை கோ.செல்வம், ஓவியர் மு. சுந்தரன், சூழலியல் செயற்பாட் டாளர் வானவன், எழுத்தாளர் லதா சரவணன், பகுத்தறிவாளர் அ.இல.சிந்தா, மு.இட்லி இனியவன், இரா. உமா, அ.கெனித்ராஜ், கவிஞர் இலக்கியா நடராசன், ஆனிப்ளோரன்ஸ் அம்மு ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணியின் இணையத் தமிழ் செயல்பாடுகளைப் பாராட்டியும், கல்வி, வேலைவாய்ப்பு, கணினி, இணையம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது பன்முகப் படைப்புகளைப் பாராட்டியும் அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்குவதாக அறிவித்திருந்தது.
இவ்விருது வழங்கும் நிகழ்வு, சென்னை, கொளத்தூரிலுள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி மாநிலத் துணைச்செயலாளர் மற்றும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் இயக்குநர் இரா. நரேந்திரன் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் வடசென்னைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எ. த. இளங்கோ, கவிஞர் வி. உ. இளவேனில், வி.பி. மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.