Close
நவம்பர் 22, 2024 12:25 காலை

புத்தகம் அறிவோம்… செயலறம் (காந்தி குறித்த நேர்காணல் தொகுப்பு)

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- செயலனம்

திருமாவளவன்:அடிப்படையில் நான் ஒரு அம்பேத்கரிய வாதியாக பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவன். அம்பேத்கர் பார்வையிலிருந்து காந்தியைப் பார்க்கிறபோது நிறைய முரண்கள் உண்டு. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும், அண்ணல் காந்தியடிகளுக்கும் ஒரே நோக்கம் என்றாலும் கூட கொள்கை அடிப்படையில் மாறுபாடு உண்டு.

ஒரே நோக்கம் என்கிற போது ஏழை எளியவர்கள் நலம் பெற வேண்டும் என்கிற அந்தப் பார்வை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிப்புக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். காந்தியடிகள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்கிற கருத்தை முன்னிருத்தியவர்.

அவர் பல கொள்கைகளை முன்வைத்தாலும் கூட, அகிம்சை என்பது அவருடைய கொள்கைகளில் முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது. வன்முறை கூடாது.

வன்முறை கூடாது என்றால் வன்முறை நிகழ்ந்தால் அடித்தட்டில் கிடக்கிற மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்படு வார்கள். .. எளிய மக்களின் மீது கருணை இருந்த காரணத் தினால் அவர்களைக் காப்பாற்றும் அக்கறை உள்ள காரணத் தினால் வன்முறை கூடாது என்கிற கருத்து எனக்கு ஏற்புடை யது. காந்தியும் அதிலே தீவிரமாக இருந்தவர் எனவே அந்தக் கருத்து எனக்கு உடன்பாடுடையது.

இரண்டாவது எனக்கு பிடித்த ஒன்று’ மதுவிலக்குக் கொள்கை.’ காந்தியடிகளுடைய இன்னொரு முக்கியமான கொள்கை. எந்த அளவுக்கு இது மனித குலத்தைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் குறிப்பாக விளிம்புநிலை ஏழை எளியவர்களின் வாழ்வை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலே பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையெல்லாம் உற்று நோக்குகிற போது காந்தியின் மதுவிலக்குக் கொள்கையைப் புறந்தள்ளிவிட்டு நாம் நகர முடியாது(பக். 100, 101, 102.)

இதுதான் தலைமைத்துவத்தில் (Leadership) முக்கியமானது. அது என்னவென்றால் ‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாரும் புத்திமதி சொல்ல வேண்டியதில்லை, மற்றவர்கள் சொல்லி அதைக் கேட்டு நான் முடிவெடுக்க வேண்டிய அவசியல்லை. ‘ என்கிற அகந்தை இருந்தால் அது தலைமைத்துவம் கிடையாது.

அதுமாதிரியான அகந்தை இல்லாத தலைவராக காந்தி இருந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் உள்வாங்கக் கூடிய, அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளக்கூடிய, அதில் திருத்த வேண்டியது ஏதாவது இருந்தால் அதைத் திருத்திக் கொள்ளக் கூடிய அந்த உயர்ந்த பண்பு அவரிடத்திலே இருந்தது.

அதுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. அதன் பிறகுதான் செப்.24 1932 -ல்  புனே ஒப்பந்தம்  ஏற்பட்டது. இவ்வாறு காந்தியிடத்திலே சகிப்புத் தன்மை என்பது மிக அதிகமாக இருந்ததை நாம் காண முடிகிறது. (பூனா ஒப்பந்தத்திற்கு முன்பு அம்பேத்கர் நேரடியாக காந்தி முன் வைத்த ஆவேசமான கருத்துக்களை புன்னகையோடு அவர் எதிர்கொண்ட விதத்தை விவரித்து அதை ஒட்டி தெரிவித்த கருத்து) (பக். 105).

செயலறம், காந்தியை ஆழமாகப் படித்தவர்கள், காந்தியச் செயல்பாடுகளில் தங்கள் வாழ்வைக் கறைத்துக் கொண்டவர்கள், காந்தியத்தை தங்கள் அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் எதிர்கொள்பவர்கள், காந்தியால் உத்வேகம் பெற்றவர்கள், காந்தியக் கொள்கைகளை முரண்பாடோடு ஏற்றுக் கொள்கிறவர்கள் என பலவிதமான 16 ஆளுமைகளுடனான –

தேசிய காந்தி அருங்காட்சிய இயக்குனர் அண்ணாமலை, காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், எழுத்தாளர்கள்,
அரவிந்தன் கண்ணையன், ஆசை, எஸ். ராமகிருஷ்ணன்,
பி.ஏ. கிருஷ்ணன், பாவண்ணன், வாசுதேவன்,

பத்திரிக்கையாளர்கள் சமஸ், கடற்கரய், சூழலியல் செயல்பாட்டாளர்தியோடர் பாஸ்கரன், காந்திய செயற் பாட்டாளர் ஈரோடு  மருத்துவர் ஜீவானந்தம், அரசியல் செயல்பாட்டாளர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ், சமூகவியல் அறிஞர் ஆர். பட்டாபிராமன், ஆய்வாளர் கே.ஆர்.ஏ நரசய்யா – உரையாடல்களை தாங்கிய நூல்.

‘என்றைக்குமானவர், எல்லாவற்றுக்குமானவர் காந்தி’ என்பதை இந்த உரையாடங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பொதிகை தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்த சித்ரா பாலசுப்பிரமணியன், இந்த உரையாடல்களை கொண்டு சென்றவிதம் பாராட்டுக்குரியது. அவர் ஒவ்வொரு வினாவிற்கு முன் சொல்லுக்கிற கருத்துக்களே நமக்கு காந்தியைப்பற்றிய புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது.இன்றைய இளைய சமுதாயத்தினர் வாசிக்க வேண்டும் இந்த நூலை.

வாசிப்போம்! காந்தியத்தை நேசிப்போம். வெளியீடு. தன்னறம் நூல் வெளி,குக்கூ காட்டுப் பள்ளி.
9843870059. ரூ.300.

# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top