Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை

தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகளைை திறந்து வைக்கின்றனர், அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் மெர்சிரம்யா உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சார்பில் தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில்  ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  (06.02.2024) குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை வழங்கினார்கள்.

பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் தாய் மண்ணை நம்பி தமிழகத்திற்கு வருகைதந்துள்ள இலங்கை வாழ் தமிழர்களை தாய் உள்ளத்துடன் தமிழகத்திற்கு வரவேற்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துகொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் இன்றையதினம் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டது.

நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கை வாழ் தமிழர்களை நம்மைபோல் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கும் வகையில் உறவுகளுக்கு மரியாதை அளிக்கும் அரசாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தையும் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனறார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி .

புதுக்கோட்டை
தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி வழங்கிய அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் மெர்சிரம்யா உள்ளிட்டோர்

பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 27.08.2021 அன்று சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு உறுதி செய்யும் வகையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார்கள்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களின் கௌரவத்தை நிலைநாட்டும் வகையில் அகதிகள் முகாம் என்பதற்கு பதிலாக இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மாதாந்திர பணிக்கொடை, அரிசி, பாத்திரங்கள், துணிமணிகள், இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுவதுடன், தமிழ்நாடு வாழ் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று இலவச கல்வி, கல்வி உதவித் தொகை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, வேலை வாய்ப்புகளுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அவர்களது தரத்தினை உயர்த்துவதுடன் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அதன்படி இன்றையதினம் தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த 58 புதிய வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் இணைப்பு மற்றும் சிமெண்ட் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மீதமுள்ள 2 இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாம்களிலும் இதுபோன்று அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எனவே இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் .

புதுக்கோட்டை
தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற புதிய குடியிருப்புகள் திறப்பு விழா

பின்னர்சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களின் நலன்களில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழக மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் துயர்துடைக்கும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைந்த புதிய குடியிருப்புகளை தமிழகம் முழுவதும் கட்டிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய முதற்கட்டமாக 58 குடியிருப்புகள் இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே பயனாளிகள் அனைவரும் இந்த இல்லங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் (அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை) கே.ரமேஷ்,

அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவண ராஜா, சிங்கார வேலன், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அலுவலர் (தனி வட்டாட்சியர்) பொன்மலர்,

முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், ஊராட்சிமன்றத் தலைவர் முத்துலெட்சுமி சுந்தரகோபாலன், அரசு ஒப்பந்ததாரர் எம்.பி.எஸ்.பாரிவள்ளல், தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாம் தலைவர் மயில்வாகணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top