Close
நவம்பர் 22, 2024 11:41 காலை

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திருமயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் நிலத்தை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் உள்ள மேலூர். அண்டக்குடிப்பட்டி, இளங்குடிப்பட்டி, கரையாம்பட்டி கிராமங்கில் காலம் காலமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நிலங்களை சில தனிநபர்கள் அதிகாரிகளின் துணையோடு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொத்தமுத்துப்பட்டி, நகரத்துப்பட்டி, மேரிநகர், கப்பத்தான்பட்டி, வலயவயல், ஒடயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு உழவடைப்பட்டா வழங்க வேண்டும்.

திருமயம் பாரத வங்கி முக்கத்தில் இருந்து விராச்சிலை சாலைவரை குடியிருந்துவரும் 32 நபர்களின் குடிசையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், லெனின் நகர், வெட்டிக்கண்மாய் புறகரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலலாக குடியிருந்து வரும் 100 குடும்பங்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இவர்களை அப்புறப்படுத்தாமல் வகைமாற்றம் செய்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1995-ஆம் ஆண்டு ராயவரத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் 42 பேருக்கு வழங்கப்பட்ட குடிமனைப்பட்டாவுக்கு கிராமக் கணக்கில் போக்குவரத்து செய்யப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக போக்குவரத்து செய்து கணக்கில் ஏற்ற வேண்டும்.

ஆயிங்குடி கிராமத்தில் பூனையன் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமயம் தாலுகா அலுவலம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.வீரமணி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைத் தலைவர் கே.முகமதலி கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top