திருமயம் புனித அடைக்கல மாதா ஆலயம் புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
புனித செபஸ்தியார் இத்தாலி நாட்டில் அரிய நற்பண்புகளின் பேரொளியாக விளங்கியவர். வியப்புக்குரிய ஞானத்தோடும், துணிவோடும் மறையுண்மைகளைப் போதித்தவர். புதுமையாய் பல நோய்களைத் தீர்த்து உடல் நலம் தந்த உத்தம வைத்தியர். திரளான அம்புகளால் எய்யப்பட்டவர். கொடுமை மாறாத அரசன் கட்டளையால் சாட்டையடி களையும், கசையடிகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவர். இயேசுவுக்காக உயிரையும், மறையையும் மெய்ப்பித்த உத்தம மறைசாட்சி புனித செபஸ்தியார்.
அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் எல்லாம் வல்ல இறை யேசுவின் இறையருளால் 2024 ஆம் ஆண்டு ஸ்ரீசோப கிருது வருடம் தை மாதம் 23-ஆம் நாள் (06.02.2024) செவ்வாய்க்கிழமை இரவு புனித செபஸ்தியார் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து அன்னதான விழாவும்’ விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியை காரைக்குடி புனித சகாயமாதா ஆலய பங்குத்தந்தை ஐ. சார்லஸ் நிறைவேற்றினார். 6.30 மணிக்கு புனித செபஸ்தியார் தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணியளவில் புனித மாதா தொடக்கப்பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது.
இதில், திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், அன்பிய இறை மக்கள், புனித அடைக்கல அன்னை இளையோர் இயக்கத் தினர் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை திருமயம் பங்குத்தந்தை அருட்திரு ஜி.ஜேம்ஸ்ராஜ் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.