Close
நவம்பர் 22, 2024 2:24 காலை

புத்தகம் அறிவோம்… அகலிகை..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- அகலிகை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி திறக்கப்பட்டு, இந்தியாவே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ராமனால் பாவ விமோசனம் பெற்ற ஒரு பெண்ணின் கதையையும் வாசிப்போமே.

1947 – 1948 ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் லட்சோப லட்சமாக இந்தியாவிற்குள் வந்தார்கள்.
“அவர்கள் உடலால் தான் கெட்டார்கள் உள்ளத்தால் கெடவில்லை .அவர்ளை இந்து இளைஞர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ” என்று காந்தியடிகள் வாதாடினார்.எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்தது என்று தெரியவில்லை.ஆனால் காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராமபிரான் வரலாற்றிலேயே அதற்கு இடம் உண்டு.

அது அகலிகையின் கதை, என்று சொல்லி , இந்திரன் முனிவர் வேடத்தில் வந்து அகலிகையை ஆட்கொண்டது,அகலிகை சாபம் பெற்றது, அதிலிருந்து ராமன் பாதம் பட்டு விமோசனம் அடைந்தது, அவளை ஏற்றுக் கொள்ளச் சொல்லி, “கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்கு புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால் தான் கெட்டாள் ஆகவே அவளை ஏற்றுக் கொள்வது உன் கடமை ” என்று முனிவரிடம் ராமன் வாதாடியது, முனிவர் ஏற்றுக் கொண்டது யாவற்றையும் சொல்லி,பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம் ராமபிரானின் வாதத்தின் எதிரொலியே என்பார் “அர்த்தமுள்ள இந்து மதத்தில் ” கண்ணதாசன்.- அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன் பதிப்பகம் (பக். 81, 82).

இராமாயணமும் மகாபாரதமும் ஒரு நெகிழும் தன்மை கொண்ட இதிகாசங்கள். எந்த மொழிக்கு போகிறதோ அந்த மொழிக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். அதே போல அவைகளில் உள்ள கிளைக்கதைகளும் உருமாறும். அகலிகை கதையும் அப்படியே.

அகலிகை கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் , ஜெயகாந்தனின் “அக்னி பிரவேசம் “என்ற கைலாசபதியின் கருத்தோடு ஒத்து 4.2.2024 இந்து தமிழ் திசையில் சுப்பிரமணிய இரமேஷ் என்ற உதவிப் பேராசிரியர் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

முல்லை பதிப்பகம் வெளியிட்டுள்ள”அகலிகை ” நூலில், அகலிகையை பற்றி பல வேறு கோணங்களில் வாசிக்க,
வால்மீகி, கம்பன், ராஜாஜி, புதுமைப்பித்தன்,கவிஞர் தமிழ் ஒளி, வ.ரா.,பெ.கோ. சுந்தர்ராஜன், எம். வி.வெங்கட்ராமன்,
அரு.ராமநாதன், கைலாசபதி, ஜமத்கனி உள்ளிட்ட 19 அறிஞர்களின் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

வால்மீகியை ஒட்டிய ராஜாஜியின் கதை,கம்பராமாயணச் செய்யுள்கள்,புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’, ‘அகல்யை’, தமிழ் ஒளியின் கவிதை  ‘கல் சொன்ன கதை’,
வ.ரா.வின் குற்றவாளி யார்?’ நாடகம், சிட்டி பெ.கொ.சுந்தரராஜனின் கதை ‘மாசறு கற்பினாள்’,எம். வி.வெங்கட்ராமனின் “கோடாரி”, கைலாசபதியின் “அகல்யையும் கற்பு நெறியும் ” என்ற மார்க்சிய மற்றும் பெண்ணியல் நோக்கிலான ஆய்வுக் கட்டுரை உள்ளிட்ட பிறரின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.அகலிகையை நேசிக்க வாசிப்போம். பதிப்பாசிரியர்- முல்லைபிஎல்.முத்தையா,முல்லை பதிப்பகம். 9840358301.ரூ.100/-.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top