Close
நவம்பர் 25, 2024 3:08 காலை

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம்: மிகவும் பயனளித்தாக ஊராட்சித்தலைவர்கள் கருத்து

புதுக்கோட்டை

வெளி மாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம் மேற்கொண்ட திருமயம், குழிபிறை உள்பட 47 ஊராட்சித்தலைவர்கள்

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம் மிகவும் பயனளிக்கும் வகையில்  அமைந்ததாக  ஊராட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 65 பஞ்சாயத்துத் தலைவர்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனர்.

இப்பயணத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் 12 பேர், ஊராட்சித்தலைவர்களில் ஆண்கள் 25 பேர், பெண்கள் 22 பேர் பங்கேற்றனர்.

ஜன. 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பட்டறிவுப் பயணத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, நெகிழி கழிவுகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது, கல்குவாரியில் மழை நீரை சேகரித்து அதை அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகிக்கும் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

முன்னதாக, இந்த பட்டறிவுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை
திருமயம் ஊராட்சித்தலைவர் எம்.சிக்கந்தர்

இந்த பட்டறிவுப்பயணம் சென்று திரும்பிய திருமயம் ஊராட்சித்தலைவர் எம். சிக்கந்தர், குழிபிறை ஊராட்சித் தலைவர் எஸ். அழகப்பன் ஆகியோர் தமிழ்மணி.நியூஸ் இணையசெய்திதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தென்காசி மாவட்டம், பரமேஸ்வரம், கல்லூரணி, பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் வீடுகளில் சேரும் குப்பைகளை உரமாக மாற்றி, வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்கு பயன்படுத்தும் திட்டமும்,

புதுக்கோட்டை
குழிபிறை ஊராட்சித்தலைவர் எஸ்.. அழகப்பன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் மழை நீரை சுத்திகரித்து வினி்யோகிக்கும் திட்டம், திருநெல்வேலி மாவட்டம், மதவக்குறிச்சி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மியாவாக்கி முறையில் காடுகள் வளர்க்கும் திட்டம் ஆகியவை மிகவும் கவனிக்கத்தக்க வகையில் இருந்ததாகவும், அவற்றை முன்மாதிரியாக வைத்து தங்களது ஊராட்சிகளில் அத்திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top