வழமையாக காணப்படும் ரஜினி படத்திற்கான அதிர்வலை களும் ஆரவாரங்களும், இங்கிலாந்தின் திரையரங்கில் காணப்படவில்லை.
ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியில் ஒலித்த விசில் சத்தம் தவிர்த்து, படம் முடியும் வரை திரையரங்கு நிசப்தமாக இருந்தது. பார்வையாளர்கள் தங்களை ஒருமுகப்படுத்தி, காட்சிகளில் கவனம் செலுத்தியதை உணர முடிந்தது.
படத்தின் கதை எளிமையானது – இது ஒரு கிராமத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற இரு பிரிவினருக்கு இடையேயான மத நல்லிணக்கத்தைப் பற்றியது.ஆரம்பத் திலிருந்தே அது எங்கு செல்கிறது என்பதை உடனடியாக யூகிக்க முடிகிறது. இயக்குனர் திரைக்கதையுடன் செயல் முறைகளை புத்துணர்ச்சி அடைய செய்ய முயற்சிக்கிறார், ஆனால் முதல் பாதியில் சற்று குழப்பத்தை அதிகரிக்கிறது.
அரசியல், கலவரம், பந்தயம், ஊர்த்திருவிழா, கிராமங்களுக்கு இடையேயான சண்டைகள் மற்றும் ஒரு சுருக்கமான காதல் கதை – அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரு சீரற்ற தொனியில் நடக்கிறது. ஒரு பக்கம் மிகை யதார்த்தம், மறுபுறம் வெகுஜன வணிகம் இரண்டும் மிகுதியாககோர்க்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் நடக்கும் ஊர் திருவிழா, இரு மதத்தினருக்கிடை யேயானா மோதல் காட்சிகளை திரையில் காணும் போது, நாலு பாரதிராஜாவையும், ஏழு மணிரத்தினத்தையும் மொத்தமாக, இந்த ஒத்த படத்துல காண்பது போல் திரைக் கதை மற்றும் நெறியாள்கை இருந்தது.
இன்றுவரை தந்தை பெயருடன் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிற ஐஸ்வர்யா, இந்த படத்திலிருந்து தன் பெயருக்கு முன்னால் இயக்குனர் ஐஸ்வர்யா என துணிந்து போட்டுக் கொள்ளலாம்.
அரசியல் விளையாட்டு மற்றும் விளையாட்டு அரசியலில் “மதம்” பிடித்து ஆடுகிற ஆட்டத்தை, மிக சாதுர்யமாக கையாண்டு மிதவாதத்தை வலியுறுத்துகிற கதையாடல் மிக சிறப்பு. படக்கோர்வையில் குறிப்பாக ஆரம்ப காட்சிகளில், எழும் குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
பல கதாபாத்திரங்கள், குறிப்பாக இரண்டாம் பாதியில் சுருக்கமாக வந்து போகின்றன, அவர்களுக்கான தோற்றம் மற்றும் திரை நேரத்தையும் சற்று ஆழமாக பயன்படுத்தி யிருக்கலாம்.
மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந்த் நடிப்பு சுவாரஸ்ய மானது. அவருக்கு கொடுக்கப்பட்ட சில உரையாடல்கள் அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளை தெளிவாக வெளிப்ப டுத்துகின்றன.
அவையனைத்தும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அர்த்த முள்ளவை. அவை நமக்கு போதிப்பது போல் அல்லா மல், படத்தின் கதையோடு ஒட்டி போவது போல் சரியாகக் கையாளப்பட்டிருக்கிறது.தன் தந்தையின் கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதமும், மகனை சுற்றி சுழலும் வேறு சில உணர்வுப்பூர்வமான காட்சிகளும் நன்றாக வே காட்டப்பட்டுள்ளன.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தங்கள் பாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களாக மிகவும் இயல்பாக திரையில் தெரிகிறார்கள். ஏனெனில் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கிரிக்கெட் விளையாடுபவர்கள்.
ஜீவிதா ராஜசேகர் இயற்கையாக இருக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். அவர் தனது உணர்ச்சிகரமான நடிப்பை அனைத்து காட்சிகளிலும் காட்டிவிட துடிக்கிறார்.படம் முழுக்க அவர் அழுவதை மட்டுமே காணமுடிகிறது.
இருப்பினும் ஜீவிதாதான் ஏற்ற, தாய் பாத்திரத்திற்கு ஜீவிதம் தந்திருக்கிறார். தம்பி ராமையா மற்றும் மாரியாத்தாள் வேடமிட்டவரும் உணர்ச்சி பொங்க நடித்திருக்கின்றனர். கபில்தேவ் வந்து போகும் காட்சிகள் கனகச்சிதம்.
ஆக.. லால் சலாம் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். மதம் தாண்டிய மனிதம் பேசப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் இதுமாதிரியான திரைப்படங்கள், அவசிய தேவையும் கூட. ஒரு பாடமாக பார்க்க வேண்டிய பல அம்சங்களை உள்ளடக்கியது இந்த திரைப்படம். ஒன்று கூடி, வடம் பிடித்து தேர் இழுத்திருக்கின்ற திரைப்பட குழுவை பாராட்டலாம்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #