Close
அக்டோபர் 5, 2024 10:31 மணி

 ஜி. யு. போப் நினைவு நாளில்..,

இங்கிலாந்திலிருந்து சங்கர்

ஜி.யு.போப் நினைவு நாள்

கனடாவில் பிறந்து, குழந்தை பருவத்திலே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து, 1839 -ஆம் ஆண்டு விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி செய்வதற்கு தமிழகம் வருகிறார் ஜி. யு. போப்.

வந்தது கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்வதற்கு தான் என்றாலும், நம் மொழி மீதான ஈர்ப்பில், இராமானுஜ கவிராயர் என்பவர் மூலம் தமிழ் கற்கிறார்.திருக்குறள், நாலடியார், திருவாசகம், சிவஞான போதம், புறநானூறு (சில பாடல்கள்), புறப்பொருள் வெண்பா மாலை (சில பாடல்கள்) போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் போப்.

ஜி. யு. போப்பின் ஆகச் சிறந்த படைப்பாக கருதப்படுவது, திருவாசக மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு ஒரு மதமாற்ற உக்தி. அது உண்மையில் திருவாசகத்தின் தமிழின் மகோன் னதத்தை ஆன்மீக அனுபவம் சார்ந்த, ஒரு மகத்தான இலக்கி யத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த ஓர் இறை மத கோட்பாட்டுக்குள் குறுக்கும் ஒரு உக்தி என்றும், வெறும் கீழ்மையான திரிபு அன்றி வேறில்லை என்றும் விமர்சிப்பவர்கள் உண்டு.

ஜி.யு. போப் சார்ந்து தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு செய்திகள் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.அவற்றில் ஒன்று.. போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற ஒரு நம்பிக்கை. அவரது கல்லறையில் அப்படி எழுதப்படவில்லை.

ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு நெருக்கமான நபர்களிடம் அந்த விஷயத்தை முன்வைத்துள்ளார் என்று சொல்கிறார்கள். முறைப்படி அவரது உயிலில் அப்படி எதுவும் கூறப்படவில்லை என்பதால், கல்லறையில் பொறிக்கப்படவில்லை.

(போப் புதைக்கப்பட்ட செயின்ட் செபுல்கர் கல்லறை, ஆக்ஸ்போர்ட் நகரில் இருக்கிறது. நான் வசிக்கும் இடத்திலிருந்து 2 மணி நேர பயண தொலைவில் இருக்கிறது. ஒரு நாள் சென்று, கல்லறையை கண்டு காணொளி பதிவிடுகிறேன்)

இன்னொன்று.. போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகிறது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும் போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதினார் என்றும், அப்படி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், ஒரு திருவாசகப் பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்து விட்டது என்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனித கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.இதற்கு போதிய ஆதாரம் ஏதுமில்லை

இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தான்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தான்; சமயம் பரப்பும் நோக்கத் தைத் தலை மேல் சுமந்தவர் தான். தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார் என்பதில் சந்தகமில்லை. இதில் பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.

வியாபாரத்திற்காக ஒருவன் ஒரு மொழியைப் பேசினால் அதற்கு அம்மொழி மேல் காதல் பாசம் என்று அர்த்தமல்ல. மதமாற்றத்திற்காக தமிழைக் கற்றவர் அவர். அதை சரித்திரம் என எழுதுவதா என்கிற விமர்சனமும் உண்டு. ஜி. யு. போப் நினைவு நாள் இன்று. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top