Close
நவம்பர் 22, 2024 4:42 காலை

புதுக்கோட்டையில் பசுமைப் பள்ளி திட்ட மாவட்ட குழு கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற பசுமைப் பள்ளி திட்ட மாவட்ட குழு கூட்டம்

புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)தலைமையில் பசுமைப் பள்ளி திட்ட மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் 5 அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பசுமை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுரைப்படி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி அவர்கள் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையால் வழங்கப்பட்ட அரசாணையின்படி காலநிலை மாற்றம் நிஜமாகி வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் தணிப்பிற்கு இளம் குழந்தைகள் தயாராக வேண்டும் எனவும் பசுமைப் புரட்சி இளைய தலைமுறையினரிடமிருந்து தொடங்க வேண்டும்.

முதலமைச்சரின் பசுமைப் பார்வை பணியை செயல்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அப்பள்ளிகளில் சூரிய ஒளி விளக்குகள் சூரிய ஒளி பம்புகளை பயன்படுத்துதல் சூரிய ஒளி ஆழ்துளை கிணறு அமைத்தல்
மழைநீர் சேகரிப்பு உரக்கிடங்குகள் மற்றும் மண்புழு உரங்கள் தயாரித்தல் காய்கறி தோட்டம் மூலிகை தோட்டம் பழ மரங்கள் நடுதல் நீர் பயன்பாட்டை குறைத்தல் கழிவு நீரை முழு சுழற்சி செய்தல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

நெகிழி இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கவும் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு பசுமைப்பள்ளி திட்டத்தை செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூபாய் 20 லட்சம் வீதம் 5 பள்ளிகளுக்கும் மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்
கூடுதல் ஆட்சியர்  அப்தாப் ரசூல் தலைமை ஏற்று பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் நடை முறைப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஒவ்வொரு மாதமும் அதன் அறிக்கையினை முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பெற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு வழங்கி அதனை மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் குறிப்பாக சுகாதாரம் பசுமைமழை நீர் சேகரிப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் முக்கியத்துவம் கொடுக்கப் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  செல்வகுமார் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) புதுக்கோட்டை  ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) அறந்தாங்கி  ராஜேஸ்வரி,  மாவட்ட ஆட்சியரக பசுமைத் தோழர்  அபிராமி
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில்,  மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பசுமைப் பள்ளி திட்டத்தினை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

முதன்மை கல்வி அலுவலக (இடைநிலை) நேர்முக உதவியாளர்  ராஜு,  ஐந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top