Close
நவம்பர் 22, 2024 6:24 காலை

நமக்கும் முதுமை உண்டு…

தமிழ்நாடு

நமக்கும் முதுமை உண்டு

ஐக்கிய நாடுகள் சபையின் ‘மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு, ‘இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக உள்ளது. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் என்பது மக்களால் மட்டுமல்ல; அரசாங்கங்களாலும் கூட இரண்டாம் பட்சமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட குடிமகன் களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.

முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. அவர்களுக்கான சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன. சில திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானவையாக இல்லை.

தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய, 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். இதில் பெரும்பாலானவை பணம் செலுத்தி, பராமரிக்கப்படுபவை ஆகவே இருக்கின்றன. முதியோர் காப்பகங்களில், லட்சக்கணக்கானோர் தங்களது கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர்.

காப்பகங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவருமே பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறியவர்கள்.

பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று தாமாகவே வெளியேறியவர்கள்; சில நேரங்களில் சில தவறுகளை செய்து விட்டு, மற்றவர்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்; ‘என்னடா வாழ்க்கை’ என வெறுத்து, ஒரு நொடியில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வந்தவர்கள் என, பல வகையினர் உள்ளனர்.

அவர்களில் பலரும், ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்தவர்கள்; நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்.

நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு யாவருக்கும் பொதுவானது என்பதை உணராமல், முதுமையும் தள்ளாமையும் வந்து விட்டது என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறது இச்சமூகம்.

ஒரு மணி நேரம் சாலையில் நின்று கவனித்தால், ஆதரவற்ற முதியோர் பலரும் நம் கண்ணில் தென்படுவர். வறுமை காரணமாக, தங்கள் வயதையும் மீறி உழைக்கும் முதியவர்கள் சிலரையும் கவனித்திருப்போம்.

சாலையோரம் சிறு கடைகள் நடத்தும் முதியவர்கள் தென்பட்டால், அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிப்பா ருங்கள். அதற்காகவே காத்திருந்தது போல தங்கள் மொத்த வாழ்க்கையையும் கொட்டித் தீர்ப்பார்கள். ஒவ்வொருவ ருக்குப் பின்னாலும், ஓராயிரம் சோகக் கதைகள் இருக்கும்.

இளம் வயதில் எல்லாமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தி ருக்கும். வீட்டையே அவர்கள் தான் கட்டி ஆண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதே முடிவு; அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருந்திருக்கும். அந்த வீட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நிறைய உழைத்திருப்பார்கள். தன்னுடைய சுக துக்கங்களை தியாகம் செய்திருப்பார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல, வயது முதிர்வு காரணமாக சம்பாதிக்க முடியாமல் போகும்போது, அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறபோது, சாதாரண வேலைகளுக்கு கூட, அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை வரும்போது, வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்து விடுகிறது. அவர்களை பாரமாக, தேவையற்ற சுமையாக பலரும் கருத ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் இயலாதவர்களாகி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும், நமக்காகப் பட்ட கஷ்டங்களையும் ஒரு நொடியில் துாக்கி எறிந்து விட்டு, முதியோர் இல்லத்தில் சிலர் விட்டு விடுகின்றனர்.

வசதி இல்லாதவர்கள் இலவச காப்பகங்களில் விடுகிறார்கள். சிலர் அவர்களைக் கைவிட்டுத் துரத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவில் ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங் களில் சேர்க்கப்படுகிறார்கள்.

வசதி படைத்தோர் தங்களது பெற்றோரை ‘பெய்டு ஹோம்’ என்ற அடிப்படையில், பணம் செலுத்தி தங்க வைக்கக்கூடிய காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கடமையைச் சிறப்பாக செய்து விட்டதாகவும், அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி செலவு செய்து பார்த்துக் கொள்வதாகவும், பெருமிதம் கொள்கிறார்கள். இதுவுமேப் பெற்றோரைக் கைவிடுதல் தான்.

வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் பெற்றோரைப் பார்க்கக் கூட வருவ தில்லை. அவர்கள் இறந்து விட்டால், உடலை அடக்கம் செய்யாமல், தாங்கள் வரும்வரை பாதுகாக்கச் சொல்கின்ற னர்.

இன்னும் சிலரோ என்னால் வர முடியாது; பணம் அனுப்பி விடுகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றனர். தங்கள் பெற்றோருக்கு தாங்கள் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு மற்றும் இறுதி மரியாதையைக் கூட செய்ய வராமல் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கின் றனர்.

காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களை விட, வீடுகளில்
தனியாக வசிக்கும் முதியோர்களின் நிலை இன்னும் பரிதாபம். தனிமைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.

சிலர் வீட்டிலேயே இறந்து, யாருக்கும் தெரியாமல், உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினர் மூலம் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தெரியவரும் பரிதாபமான சூழல் காணப்படுகிறது.

காப்பகங்களில் இருக்கும் முதியோர்களைப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் சில நேரங்களில் சுடு சொற்கள், அவமானங்கள், புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதை விட, இதுவே மேல் என்று அவர்களே கூட நினைக்கக்கூடும்.

இங்கே அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உடைகள், நேரத்துக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. தங்கள் வயதை ஒத்த நண்பர்களும் இருக்கிறார்கள். நடப்பது, சாமி கும்பிடுவது, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.

வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்மனதுக் குள் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை பிரிந்த கஷ்டம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், தங்கள் உறவினர்களைப் பார்க்க இயலாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.

முதியோர் இல்லங்களில் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும், ரத்த உறவுகளுக்கு ஈடாகாது. காப்பக வசதி களால் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களைக் கைவிட்டவர் களுக்கு சாபமே மிஞ்சும். வயது முதிர்வு மற்றும் தள்ளாமை காரணமாக, அவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக் கிறோம். இப்போது தான், அவர்களுக்கு, நாம் தேவை என்பதை நம் வசதிக்காக மறந்து விடுகிறோம்.

முதியோர்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம், அவர்களுக்குப் பயன் படாமல் போய் விடும். நம்மிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மீது நடத்தும் வன்கொடு மைகள் பற்றி எந்தப் பெற்றோரும் பெரும்பாலும் யாரிடமும் புகார் அளிப்பதில்லை. முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் என்ற பாசத்தாலும், அவர்கள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

அவ்வாறு உள்ள முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் நலன் காக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.

வயதாகும்போது உடல் நல பாதிப்போடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு, அவர்களை நடத்த வேண்டும். உணவு, உடை, உறைவிடம் மட்டும் வழங்கினால் போதாது. போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு குடும்பத்தினரும், அரசாங்கமும் முயற்சியெடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நமது அரசாங்கம் கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்து பேணுவதுபோல், மூத்தக் குடிமக்களையும் கண்காணித்து அவர்களின் நலம் பேண முயற்சி மேற்கொண்டால், பலரும் பலனடைவர்.

முதியோர் நலனுக்கென்று தனியாக ஊழியர்கள் நியமித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், மருத்துவமனை செல்ல இயலாத முதியோருக்கு, ‘வீடியோ கால்’ போன்ற வசதிகள் மூலமாக கூட மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.

பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரமாவது பெற்றோர்களுடன் நேரம் செலவிட வேண்டும். வெளியூர்களில் வசித்தால் கூட அலைபேசியில் தினம் ஒரு முறையாவது பேசி அவர்களை மகிழ்விக்கலாம்.

நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக நினைத்துத் துாக்கிப் போட்டு விடாமல், கொஞ்சமாவது மன நிறைவுடன் அவர்கள் தங்கள் கடைசிக் காலத்தைக் கழிப்பதற்கு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்!

இணையத்தில் வந்த ஒரு கதையில் ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசிக்கிறார். அக்கம் பக்கத்தினர் கூட அவரது வீட்டிற்கு வருவதில்லை. அவருக்கோ, வெளியே சென்று வரும் அளவுக்கு உடல்நலம் இல்லை. அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்லும் ஒரே ஒருவர் பேப்பர் போடும் பையன் மட்டும்தான்.

வழக்கமாக, பேப்பர் போடுவதற்காக கதவோரம் வைத்திருக்கும் பெட்டி இல்லாததால், வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறான் அந்தப் பையன். அவனை அழைத்து,
‘இனி, பேப்பரை என் கையிலேயே கொடு. கூடுதலாக பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்’ என்கிறார்.

‘பேப்பர் வாங்க வராமல், தனக்கு ஏதாவது நடந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சொல்லி விடு; என் பிள்ளையை தொடர்பு கொண்டு தெரிவித்து விடு’ எனக்கூறி, தனது வாரிசுகளின் கைப்பேசி எண்ணை, அந்த பையனிடம் தருவதாக அந்த கதை இருக்கும்.

அந்த அளவுக்கு, இரண்டு வார்த்தை பேசக்கூட ஆள் இல்லாமல், பல முதியவர்கள் இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது வலியை உணர, நமக்கும் முதுமை வரவேண்டும்.

ஒரு உண்மை சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நகரின் மையத்தில் நட்சத்திர வசதிகளோடு கூடிய ஒரு அப்பார்ட் மெண்ட். லட்சக்கணக்கில் பென்ஷன் வாங்கிக் கொண்டி ருந்தாலும், தனியாக வசிக்கும் சூழலில் நிறைய முதியவர்கள் வசிக்கின்றனர்.

தேவையான உதவிகளை செய்து தரும், தனியார் நிறுவன ஊழியர், அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்திருந்தார். தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ என குறுஞ்செய்தி போடும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்தி ருந்தார்.

தினமும் மெசேஜ் போடக்கூடிய ஒரு முதியவர், ஒரு நாள் முழுவதும் எந்த பதிவும் போடவில்லை. சந்தேகப்பட்டு சென்றுபார்த்தபோது, திடீரென கை, கால்கள் இழுத்துக் கொண்டதால், துாக்கி விடக்கூட ஆளின்றி, தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ குழு இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இறுதியாகப் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். கடைசி காலத்தில் உங்கள் பெற்றோரை நேசியுங்கள்; தனியாக தவிக்க விடாதீர்கள். அவர்கள் கால பொக்கிஷம். உரையா டுங்கள்; கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் உங்களது வாரிசுகளை விளையாட வையுங்கள். அவர்களிடம் கதை கேட்கச் சொல்லுங்கள்; அவர்களுக்கும் வரலாறு தெரியட்டும். நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

# ஈரநெஞ்சம் மகேந்திரன் #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top