இந்தக்கோயிலில் ( ஸ்ரீரங்கம்) துலுக்க நாச்சியார் சந்நிதி உள்ளது. சுரதானி என்ற முஸ்லீம் பெண் நம்பெருமாள் மீது பற்று கொண்டு அவருடைய திருவரங்கத்திற்கே வந்து அங்கேயே தன் சரீரத்தை விட்டாள். அரங்கன் தன் இருப்பிடத்திற்கு சுரதானியை ஏற்று அழைத்துக் கொண்டார். சுரதானியை சித்ர ரூபமாக எழுதி வைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். பெருமாளுக்கு அமுது படைப்பதோடு கோதுமை ரொட்டியும், பருப்பும், துளுக்க நாச்சியாருக்கு பெருமாள் அழுது செய்தருளுவார்.(பக். 148).
புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தில் செவிலியராக பணியாற்றி ஒய்வு பெற்ற கவிஞர் சுப. இராதாபாய் எழுதி, புதுக்கோட்டை “அம்பிகா கல்வி அறக்கட்டளை” வெளியிட்டுள்ள -“நல்வினை நல்கும் தீர்த்த தீர்த்தல உலா!” நூல் ஒரு சிறந்த ஆனமீகப் பயணநூல். தனது பயண அனுபவங்களை மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ராதாபாய் இந்நூலில்.
இராமேஸ்வரம், புவனேஸ்வரம், பூரி, புத்தர் ஞானம் பெற்ற புத்தகயா, கயை (கயா), பிரயாகை, காசி, ஸ்ரீரங்கம், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்கள், அவற்றின் வரலாறு, வழிபாட்டு முறை, சிறப்புகள் யாவற்றையும் சித்திரமாக்கித் தந்துள்ளார் ராதாபாய்.
அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில் பரணீதரன் எழுதிய ஆன்மீகப் பயணக் கட்டுரைகளின் வாசிப்பனுபவங்களை இந்த நூலும் நமக்குத் தருகிறது .
மேற்கண்ட இடங்களுக்கு போக முடியாத, எம் போன்ற வர்களுக்கு, இந்த நூலை வாசித்தவுடன் அந்த இடத்திற்கே போய் வந்த அனுபவம் ஏற்பட்டது.
ஆன்மீக சுற்றுலா போக விரும்புகிறவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் சிறப்பாக நமக்குத் தந்துள்ளார் ஆசிரியர்.
செவிலியராக இருந்து மனிதர்களின் உடல் நோய்க்கு மருந்திட்டவர், அவர்களின் உள்ளம் அமைதியுற, மகிழ்ச்சியடைய இந்த நூலைத் தந்துள்ளார் ராதாபாய்.
புதுகோட்டையில் இரண்டு ராதாபாய்கள் சிறப்பு பெற்றவர்கள். ஒருவர், அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றிய, தனக்கு பார்வையில்லையென்றாலும் மற்றவர்களுக்கு கல்வி வழிகாட்டிய பேரா.ராதாபாய். இரண்டாவது, செவிலியராக பணியாற்றி, பணி வழி உடலுக்கும், நூல் வழி உள்ளத்திற்கும் மருந்திட்ட சுப. ராதாபாய்.
வெளியீடு-அம்பிகா கல்வி அறக்கட்டளை (குறள் நெறிப் பயிலகம் இணைந்தது).-ரூ. 150.
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #