திருவண்ணாமலை அருகே ரூபாய் 145 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை திருக்கோவிலூர் இடையே ரூபாய் 145 கோடியில் 19.500 கிலோமீட்டர் தொலைவிற்கு இருவழி சாலையை கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
இதில் மூன்று சிறு பாலங்கள் ,38 மிகவும் சிறு பாலங்கள் கட்டப்பட்டன.
நீர்நிலைகள் அமைந்த பகுதியில் 2,100 கிலோமீட்டர் தொலைவு தடுப்புச் சுவர் எழுப்பியும் 14.280 கிலோமீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டது, சாலையோரத்தில் இருந்த 358 மரங்கள் அகற்றப்பட்டன.
இதற்கு மாற்றாக 3580 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நான்கு வழி சாலை பணி நிறைவு பெற்றதை அடுத்து இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் இந்த நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதை அடுத்து வாகன போக்குவரத்தை சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ,திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல் , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போக்குவரத்து துறை அதிகாரிகள், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.