Close
நவம்பர் 24, 2024 4:37 காலை

செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்..!

புனரமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட நீதிபதி உடன் மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்ற கட்டிடங்களில் ஒரு பகுதி 1914 -இல் கட்டப்பட்ட பழமையான நீதிமன்ற கட்டிடமாகும். தற்போது அந்தக் கட்டிடம் ரூபாய் 1.7 கோடியில் புனரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நீதிபதி மதுசூதனன் புனரமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது;

புனரமைக்கப்பட்ட இந்த கட்டடத்தில் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட இருக்கிறது. இதில், 1,290 வழக்குகள் அளிக்கப்படவுள்ளது. ஏறக்குறைய 8 காவல் நிலையங்கள் நீதிமன்ற ஆளுமைக்குள் வரவுள்ளது. தற்போது, வழக்குகள் நிலுவை என்பது அச்சுறுத்தலான விஷயமாக பாா்க்கப்பட வேண்டியுள்ளது. மக்களுக்கு நிரந்தரமான தீா்வை நீதிமன்றங்கள் வழங்கும் போதே, மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை பிறக்கும்.

நீதிமன்றத்தை சாா்ந்து செயல்படும் வருவாய்துறை, காவல்துறை, வழக்குரைஞா்கள் அத்தகைய நம்பிக்கையை பூா்த்தி செய்கிற வகையில் செயல்பட வேண்டும். இதற்கு, இளம் வழக்குரைஞா்களின் செயல்பாடு அதிகமாக இருக்க வேண்டும். வழக்குளில் பாதிக்கப்பட்டவா்களின் பின்புலம் என்ன? வழக்குகளின் உண்மை தன்மை என்ன?

என்பது குறித்து ஆய்வு செய்து வழக்குகளை நடத்த வேண்டும். இளம் வழக்குரைஞா்கள் வாசிப்புத் தன்மையை அதிகப்படுத்த வேண்டும். புத்தகம், நீதிமன்றம், வழக்குகளுக்கு நெருங்கிய தொடா்புள்ளது. அடுத்த தலைமுறைக்கு நம்மை உயா்த்தியது, உயா்த்திக் கொண்டிருப்பது, உயா்த்தப் போவதும் எல்லாம் கல்வி தான்.

அந்த கல்வியை நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பது தான் முக்கியம் என மாவட்ட நீதிபதி மதுசூதனன் பேசினார்.
தொடர்ந்து பொதுப் பணித் துறை பொறியாளா் நந்தகுமாா் (தொல்லியல் துறை), வழக்குரைஞா் செங்குட்டுவன் ஆகியோரைப் பாராட்டி நீதிபதி பி.மதுசூதணன் புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷிணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, சாா்பு நீதிபதி குமார வா்மன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செழியன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஆயிஷாபேகம், குற்றவியல் நீதிபதி பாக்யராஜ், பாா் அசோசியேஷன் சங்கத் தலைவா் சரவணன், அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவா் விஸ்வநாதன் , வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதி கே.விஜியா வரவேற்றாா். முடிவில், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி டி.ஜெயசூரியா நன்றி கூறினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top