Close
நவம்பர் 21, 2024 2:27 மணி

புத்தகம் அறிவோம்.. மகாகவி பாரதியாரின் மணிமொழிகள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மகாகவி பாரதியாரின் பொன்மொழிகள்

அன்னதானம்.

சிற்சிலர் புதிய புதிதான தர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னதானம் போடுவது தான் உத்தம தர்மம். இது முப்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்கு கஞ்சி காட்ட முடியாவிட்டால் அந்த தேசத்தில் எத்தனை பெரிய வித்வானிருந்தும்பிரயோஜனமென்ன? நாகரீகம் உயர்வதனாலே போஜனம் குறைவதாக இருந்தால் அந்த நாகரீகம் அவசியமில்லை. -மாலை(பக் 23).

உழைப்பு

நமக்கு செய்கை இயல்பாகுக
ரசமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை
விளையும் செய்கை பரவும் செய்கை
நமக்கு பராசக்தி அருள் செய்க
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல்
மாசெடுத்தல் நலந் தருதல் ஒளி செய்தல்
இச்செயல்களை அருள் செய்க
– வசன கவிதை(பக். 35).

டாக்டர் என்.ஸ்ரீதரன், 1982 ஆண்டில் தொகுத்த நூல் “மகாகவி பாரதியார் மணி மொழிகள். ” இந்த தலைப்பில் வந்த முதல் நூலும் இதுதான். தற்போது மூன்றாம் பதிப்பாக 2023 -ல் வெளிவந்துள்ளது.

அச்சமின்மை, அறம், அன்பு, ஆசை, ஆத்திச் சூடி, இயற்கை, இன்பம், உடல் வலிமை. உண்மை, எளிய வாழ்வு, ஒலி,ஒற்றுமை, கடவுள், கடமை, காந்தியடிகள்,
காலம், குடும்பம், குழந்தை, கொள்கை, கோவில், சலிப்பின்மை , சாதி, சுகம், சூரியன், சோம்பல், தமிழ், தாய்நாடு, மனைவி, மாதர், வலிமை, வறுமை, விவேகம் வெற்றி என்று மொத்தம் 100 தலைப்புகளில் பாரதியின் மணிமொழிகள் மாலையாக தொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளின் கீழே, மேலே உள்ளது போல, உரைநடை, கவிதை என்று மணிமொழிகள் கோர்க்கப்பட்டுள்ளன.
ஆசிரியரின் பாரதியின் முழு வாசிப்பினால் கிடைத்த பொக்கிஷம் இந்நூல்.

டாக்டர் ஸ்ரீதரன் சொல்வது போல “எனது இத்தொகுப்பு சிறியது, சிறு துணுக்குகள் திரட்டு போன்றது. எனினும், மாணவர்கள், சொற்பொழிவாளர், எழுத்தாளர்கள், பயணிகள், அலுவர்கள் முதலிய பல வகையினருக்கும், எவ்வயதினருக்கும் நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் இந்நால் பயன் தருவது உறுதி.

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top