Close
நவம்பர் 24, 2024 6:27 காலை

மூத்தோர் சொல் மட்டுமல்ல முதியோர் வாக்கும் முக்கியமே

தமிழ்நாடு

முதியோர் வாக்களிக்க வசதி செய்யக்கோரிக்கை

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.

வாக்காளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து வருவதோடு வாக்குப் பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தங்கள் வாக்கினை செலுத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்திருந்தது. எனினும் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்திருந்த மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியா முழுவதிலும் இலட்சக்கணக்கான ஆதரவற்ற முதியவர்கள் முதியோர் காப்பகங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

பெரும்பாலானவர்கள் வயது மூப்பு காரணமாக தள்ளாமை நரம்புத்தளர்ச்சி பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்பட்டு வருபவர்கள். அவர்களில் தானாக எழுந்து நடக்க முடியாத படுத்த படுக்கையாக இருக்கும் ஆதரவற்ற முதியவர்களும் அடக்கம்.

இவர்களுக்கென்று தனிப்பட்ட வீடோ வசிப்பிட முகவரியோ இல்லை. எனினும் தாங்கள் வசிக்கும் காப்பக முகவரியை குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தல்களின் போது நேரில் வந்து வாக்களித்த ஆதரவற்ற முதியவர்களும் அவர்களை வாக்களிப்பதற்கு அழைத்து வந்த காப்பகப் பொறுப்பாளர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது.

ஒரே ஒரு வாக்கு கூட தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் இலட்சக்கணக்கான முதியவர்கள் தங்களுடைய வாக்கினை செலுத்த முடியாத சூழல் உள்ளது.

இன்றளவிலும் நிரந்தர முகவரிக்கான உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பல முதியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாத சூழல் இருக்கிறது. அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறவும் தேர்தல் ஆணையம் உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இதன் மூலம் வீடுகளை இழந்து உறவினர்களைப் பிரிந்து ஆதரவற்ற நிலையில் காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களும் அரசுக்கு எளிதாகக் கிடைக்கும் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களும் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வசிக்கும் காப்பகங்களில் இருந்தே தங்கள் வாக்கினை செலுத்துவதற்கு உரிய வசதி செய்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#ஈரநெஞ்சம் அறநிலையம்#.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top