Close
நவம்பர் 21, 2024 6:06 மணி

சமூக வலை தள பதிவுகளில் தேவை அறம்…

தமிழ்நாடு

சமூக வலைதளங்கள்

சமூக வலை தளங்களிடமும் செயல்பாட்டாளர்களும் ஒரு செய்தியை பதிவிடுவதில் அறத்தை கடைப்பிடிக்க வேண்டியது தற்போதைய தேவையாக இருக்கிறது.

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையான சம்பவம் நம் அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் எதிர்ப்பு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த செய்தியை அதிகமானோர் முகநூல், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் பகிர்ந்து தங்களது தார்மீக கோவத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வாறு பதிவிடுபவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படம் போட்டுப் பதிவிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 பாதிக்கப்பட்ட குழந்தையை நம் வீட்டுக் குழந்தையாக நினைத்து பாருங்கள். அந்த பெற்றோருக்கு இந்நிகழ்வு எவ்வளவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கும். அதோடு உங்களின் இந்த செயலால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மேலும் அவர்களை வேதனைப் படுத்த வேண்டாமே.

தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கூட புதுச்சேரி சிறுமியின் பேரைச் சொல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமி, கொலையான சிறுமி என்று தான் சொல்கிறார்கள். காணொளியிலும் சிறுமியின் முகத்தை மறைத்தே வெளியிடுகிறார்கள்.

ஒரு வாரத்திற்கு முன் கான்பூரில் 2 சிறுமிகள் கூட்டுப் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் சடலமாக கிடந்த நிலையில், நேற்று அதில் ஒரு சிறுமியின் தந்தை இந்நிகழ்வின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.

இணையத்தில் ஒரு முறை பகிர்ந்தது எப்போதும் அழியாமல் பல வருடங்களுக்கு சுற்றி வரும்என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.இறந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புகைப்படத்துடன் இந்த பதிவுகளை பார்க்கும்போது அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பாருங்கள்.

எந்த ஒரு குற்றச்செயலாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின்(victims) புகைப்படம், பெயர் முகவரி குடும்ப உறுப்பினர்கள்உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை காவல்துறை விசாரணை மற்றும் ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்றே சட்டமும் சொல்கிறது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது பாதிக்கப்பட்டவர்களின் பெயர் புகைப்படத்தை வெளியிடுவதை தவிர்க்கலாமே. அதற்கு பதிலாக குற்றவாளியின் புகைப்படத்தை போட்டு நீதி கேளுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை உணர்ந்து சிந்தித்து செயல்படுங்கள் என்பதே வேண்டுகோள்.

# ஈர நெஞ்சம் அறநிலையம் #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top