தீட்டு…ஏப்ரல் 26, 1920 திங்கட்கிழமை … நடுகாலைப் பகுதியில், 10.30 மணிக்கு, ராமனுஜன் உலக வாழ்வை நீத்தார் … அப்போது அவருக்கு வயது 32 தான்.
அவர் கடல் கடந்து சென்று’ தீட்டு’ ஆகிவிட்டதாலும் ( .. அக்காலத்தில் கடல் கடந்து வெளிநாடு செல்வது பெரிய பாவமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தணர்கள் கடல் பயணம் செய்யக்கூடாது. தீட்டாகிவிடும். மீறினால் சாதி நீக்கம் செய்யப்படுவார்கள். பக்.76).
இந்தியா திரும்பிய பிறகு பிரயாசித்தம் செய்யாததாலும் அவருடைய உறவினர்கள் மயானத்திற்கு வரத்தயாராக இல்லை. இதனால் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியிராததால் இரண்டு மணி நேரத்திலேயே பிற்பகல் ஒரு மணிக்கு சேத்துப்பட்டு மயானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. முதலில் சொல்லி வைத்த புரோகிதர் நிலைமை தெரிந்ததும், தீட்டானவருக்கு சடங்கு செய்தால், தானும் பாதிக்கப்படுவோம், தொழிலை இழப்போம் என்று வராமலேயே இருந்து விட்டார்!
ராமச்சந்திரராவும் நம்பெருமாள் செட்டியும் வேறு ஒரு புரோகிதரை பிடித்து, சரிகட்டி, இறுதிச்சடங்குகள் செய்ய வைத்தனர். ராமானுசனுக்கு குழந்தைகள் இல்லாததாலும், தந்தையும், தம்பியும், மைத்துனரும் ஜாதி விலக்கத்திற்கு அஞ்சியதாலும், தகனத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த நண்பர் ராஜகோபாலாச்சாரிக்கும் அந்த பிரச்சினை இருந்ததாலும், உலகமே பின்னர் கொண்டாடிய அந்த மேதைக்கு எவ்வகையிலும் சொந்தமே இல்லாதவர்களான ராமச்சந்திரராவ், நம்பெருமாள் செட்டி, சென்னை கலெக்டர் ஆகியோர் சேர்ந்து ‘கோவிந்தா’ என்று கோஷமிட்டு அவரது சடலத்திற்கு எரியூட்டினர்.(பக். 151 – 152).
டாக்டர் என்.ஸ்ரீதரனின், “கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் ” நூல் ராமானுஜனின் 125- ஆம் பிறந்த ஆண்டு சிறப்பு வெளியீடாக, 2012 ஆண்டில் கங்கை புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டது. ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவும் எளிய சிறந்த நூல் இது.
18 வயதில் காணாமல் போன ராமானுஜனை அவரின் தந்தை, கண்டால் தெரியப்படுத்தச் சொல்லி ‘இந்து’ பத்திரிக்கையில் செய்த விளம்பரத்தில் நூலைத் தொடங்கி, அன்று காணாமல் போனவர் பிறகு என்றைக்கும் காணமல் போக முடியாதபடி, நிரந்தரமான, அதிசயமான, அமரத்துவம் பெற்றவராக உயர்ந்தார் என்கிறார் ஶ்ரீதரன்.
ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் கணித வரலாறு, அன்றைய சமூகச் சூழல், ராமனுஜனின் கணித கண்டுபிடிப்புகள், ஹார்டி போன்ற ஆங்கிலேயர்கள் செய்த உதவிகள், நம்பெருமாள் செட்டி போன்ற புதிய நண்பர்கள் செய்த உதவிகள்,குடும்ப உறவில் உள்ள சிக்கல்கள் யாவற்றையும் எளிய நடையில் வாசகருக்கு வழங்கியிருக்கிறார் ஸ்ரீதரன். ஒரு நாவல் வாசிப்பின் அனுபவம் இந்த நூலை வாசிக்கும் போது உணரலாம்.நூலின் இறுதியில் ராமானுஜனின் வாழ்க்கைப் பயணம் ஆண்டு, நாள் வாரியாக தரப்பட்டுள்ளது.
ராமானுஜன் ஜோதிடத்தில் நம்பிக்கையுடையர். அவரின் ஜாதகக் குறிப்பும் இந்நூலில் உள்ளது. “தனது ஜாதகத்தை அவர் ஆராய்ந்து தனது ஆயுள் 32 வருடம் 4 மாதம் என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அந்தக் கெடுதாண்டி 4 நாட்களே கூடுதலாக அவர் உயிருடன் இருந்தார் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ராமானுஜன் போட்ட இந்தக் கணக்கில் 4 நாள் அளவில் சிறு தப்புதான் ஏற்பட்டுவிட்டது. இந்தக் கணக்கு முழுமையாகத் தப்பாகிப்போய் அவர் நீண்ட ஆயுள் பெற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ! ” என்று கேட்கிறார் ஸ்ரீதரன்.
வெளியீடு-கங்கை புத்தக நிலையம், (2020), 23 தீனதயாளு தெரு,தி.நகர், சென்னை, 17.
ரூ.100.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#