Close
நவம்பர் 23, 2024 9:53 காலை

புத்தகம் அறிவோம்… நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

அடிப்படையில் சமூக ஒற்றுமை உடையவராக நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் இருந்ததில்லை.
தாயமுறை பிரதானமானதோர் வேற்றுமையாக இருந்தாலும் தமக்குள்ளும் இனவன் என்ற ஒற்றுமையுடன் இல்லை. வெள்ளாளர் பற்றிய சில பல மொழிகள் இங்கு யோசிக்கத் தக்கவை.
“வெள்ளாளன் போன இடமும் வெள்ளாடு போன இடமும் வெட்டை”
“அடுத்த வீட்டிலே விளக்கெரிவது பிடிக்காதவன் ”
“வெள்ளாளனுக்கு வெள்ளாளனே விரோதி”
“கோடி மறவர்க்கு காணி வெள்ளாளன். (பக்.76-77).

“எந்த வெள்ளாளர் வீட்டு விஷேசங்களிலும் அசைவம் என்பது இன்னும் இல்லை. பெண்கள் அதை அனுமதிப்பதில்லை. ஈமச்சடங்கான கல்லெடுப்பு அடியந்திரம் கழிந்த பிறகு, ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்து கோழிக்கறி அல்லது ஆட்டிறைச்சி சமைப்பது என்பது அசைவம் பங்கு பெரும் நாள். ஆனால் ஒரு சடங்காக அது இல்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் இறைச்சிக் கறிக்கும் மைத்துனர்மார் செலவு செய்ய வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைக்கு சகோதரிகள் ‘மாப்பிள்ளை கறியும் சோறும்’ போடும் போது அசைவம் சமைப்பதுண்டு. ”
பக்.97

நாஞ்சில் நாடனின், “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை ஒரு சமுகவியல் ஆய்வு நூல். நாஞ்சில் நாடன் தன்னுடைய சமூகத்தைப் பற்றி உள்ளது உள்ளபடி, நடுநிலையோடு எழுதிய நூல் இது. 1909 ல் கவிமணி எழுதிய “நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்” நூலுக்குப் பிறகு, நாஞ்சில் நாட்டு வெள்ளாள சமூகத்தைப் பற்றிய விரிந்த நூல் இது.

வெள்ளாள குடிகள்,
ஊர் அமைப்புகள்,
விவசாயமும் தொழிலும்,
வழிபாடுகளும் சடங்குகளும்
நாஞ்சில் நாட்டுப் பெண்கள்,
உணவுப் பழக்கங்களும் பிறவும் உள்ளிட்ட 12 தலைப்புகளில் இந்நூல் வரையப்பட்டுள்ளது.
பழம் பெருமையோடு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் ஆசிரியர் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.

நூலை வாசித்த பின் எனக்குத் தோன்றியது, தமிழகத்தில் உள்ள எல்லா சமூகத்திற்கும் சில, பல பொதுவான அம்சங்கள் இருப்பதுதான்.நாஞ்சில் நாடன் ஒரு கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், நல்ல கட்டுரையாளர் – இவை யாவின் மொழியும் இந் நூலில் உள்ளது.காலச்சுவடு பதிப்பகம் (2008),நாகர்கோவில், விலை-ரூ.90.
#சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top