Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

திருநங்கைகள், நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்..!

சீர்வரிசை தட்டில் தேர்தல் அழைப்பிதழ் அளித்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்  வழங்கிய, மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியறுத்தி, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு சீர்வரிசை தட்டில் தேர்தல் அழைப்பிதழ் அளித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கலந்து கொண்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் 100 சதவீத வாக்களித்த மாவட்டம் எனும் சிறப்பை பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

அதன்படி, திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில், திருநங்கைகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, சீர்வரிசை தட்டில், விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற தேர்தல் அழைப்பிதழை திருநங்கைகளிடம் அளித்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நாம் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி கிராமத்தில், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் மூத்த வாக்காளர்களிடம் சீர்வரிசையுடன் தேர்தல் அழைப்பிதழ், துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த முதல்முறை வாக்காளர்களுக்கு, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு எவ்வாறு வாக்களிப்பது என செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

அப்போது, மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட கலெக்டர், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையம் கிராமத்தில் இருளர் சமூக மக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்தன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, தாசில்தார் தியாகராஜன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top