Close
நவம்பர் 21, 2024 5:25 மணி

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் “பாவேந்தர் விழா”

புதுக்கோட்டைொ

புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற பாவேந்தர் விழா

பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ‘பாவேந்தர் தமிழுக்கு அமுதென்று பேர்‘ என்ற  தலைப்பில் விழா எடுக்கப்பட்டது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்கம் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற, நிகழ்வில் பாவேந்தரும் சமூகமும் என்ற தலைப்பில் தமிழறிஞர் குமா. திருப்பதி உரை நிகழ்த்தினார். பாவேந்தரும் மொழியும் எனும் தலைப்பில் கவிஞர் மு .கீதா உரை நிகழ்த்தினார்.
பாவேந்தரைப் பல தலைப்புகளில் அவர் கொண்டு வந்து நிறுத்திய பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதாக இருந்தது.பள்ளியில் சிறந்த மாணவர் ஒருவர் தன்னை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்கிற முனைப்பில் கவிஞர் மு.கீதா தன் உரையை வடிவமைத்திருந்தார்.

கவிஞர் குமா.திருப்பதி பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை வாசிப்பில் தன்னை வளப்படுத்திக் கொண்டிருப்பவர்.
தேர்ந்த தமிழறிஞர். அவர் நிகழ்த்திய உரை பாவேந்தருக்கு அணிவிக்கப்பட்ட அறிவுப் பொன்னாடை. மிக இயல்பாகவும் மிக ஆழமாகவும் இதுவரை யாரும் மேற்கோள் காட்டாத கவிதைகளை மேற்கோள்காட்டி கேட்போரை வியக்க வைத்தார் திருப்பதி.

பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வரிசையில் அந்த உயரத்திற்கு சற்றும் குறையாமல் குன்றேறி நின்று புகழ்க் கொடி பறக்க விடும் தமிழ் அன்னையின் செல்லப்பிள்ளை கவிச்சுடர் கவிதைப் பித்தன், திருப்பதியின் பேச்சில் மனம் நெகிழ்ந்து நிறைவுறையாக மேடையேறி பாவேந்தருக்கும் திருப்பதிக்கும் ஒரு புகழுரை நிகழ்த்தி நிகழ்வுக்கு அணி செய்துஅனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

விழாத் தலைமை ஏற்ற பொன்னமராவதி நெ. இரா‌ சந்திரன் மிகக் கச்சிதமான தலைமை உரையை நிகழ்த்தினார். கவிஞர் பாபு ராஜேந்திரன், தமிழ்ச் சங்கச் செயலாளர் கவிஞர் மகா சுந்தர் கவிச்சரம் தொடுத்து பாவேந்தரை கவிதையில் நிறுத்தினர்.

புதுக்கோட்டை
பாவேந்தர் விழாவில் பங்கேற்ற ஆளுமைகள்

ஞானாலயா எனும் அறிவு தேசத்தின் அதிபர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி முழுமையாக அமர்ந்து நிகழ்வை கண்டு ரசித்தார். பாவேந்தர் பாரதிதாசன் படைத்த அழகின் சிரிப்பு உள்ளிட்ட பல நூல்களின் முதல் பிரதி அவரிடத்தில் இருக்கிறது.

கவிஞர் சு .பீர் முகமது வருகை பதிவேட்டின் வழியே நிகழ்வை ஆவணப்படுத்தினார். வாசகர் பேரவைச்செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன்  வருகை தந்த அனைவருக்கும் வெண்மை நூலினை பரிசாக வழங்கி நன்றி  கூறினார்.  ஆர். எஸ். காசிநாதன் நிகழ்வை  தொகுத்து வழங்கினார்.

கவிஞர்கள் ராசி பன்னீர்செல்வன், கவி முருகபாரதி ,எஸ். இளங்கோ, சோலச்சி, சுதந்திர ராஜன், கஸ்தூரி ரங்கன், மைதிலி கஸ்தூரி ரங்கன், இயற்கை விவசாயி தனபதி , உஷா நந்தினி, விஜயலெக்ஷ்மி அம்மையார், வம்பனார் அன்பழகன், எழுத்தாளர் ராஜநாராயணன், வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் அய்யாவு, பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன், கவிஞர் உதயகுமார் , பாவேந்தன் கவிதைப் பித்தன் , அரபு தேசம் கத்தாரில் இருந்து வருகை தந்திருந்த கவிஞர் சிக்கந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர்.

 நிகழ்வுக்கான அனைத்து உதவிகளையும் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மூத்த விஞ்ஞானி டாக்டர் ராஜ்குமார்  செய்து தந்திருந்தார். விடுமுறையை பொருட்படுத்தாமல் அவரது அலுவலகப் பணியாளர்கள் எல்லா உதவிகளையும் செய்திருந்தார்கள். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் நம் உயிருக்கு நேர் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top