Close
நவம்பர் 23, 2024 8:25 காலை

மகாராஜா… திரைப்பார்வை.. இங்கிலாந்திலிருந்து சங்கர்..

உலகம்

மகாராஜா- திரைப்பார்வை

விஜய் சேதுபதியின் திரைப்பட வாழ்க்கைப் போக்கில் தனது 50வது படமாக வெளிவந்த மகாராஜா, மக்களின் பேராதரவை பெற்று வெற்றி நடை போடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முக்கியமான மைல் கல்லுக்கு ஏற்ற கதை மற்றும் திரைக்கதையை தேர்வு செய்துள்ளார் மக்கள் செல்வன்.

நேற்று இரவு இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸ் திரையரங்கில் பார்த்தேன். வழமைக்கு மாறாக பக்கத்து மாநிலக்காரர்கள் அதிகமாக பார்வை யிட்டனர். ஆந்திர, கேரள மாநிலங்களில் விஜய சேதுபதிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதை உணர முடிந்தது.

படத்தை பாராட்ட எண்ணும் போது எங்கிருந்து தொடங்குவது, எதை பாராட்டுவது என்கிற குழப்பம் எழுகிறது. இந்த பதிவில் படம் குறித்த மையக்கருவை, பாத்திரங்கள் மீதான பார்வையை வெளிப்படுத்த போவதில்லை. ஒரு மிக நீண்ட பதிவாகி விடும். இந்தப் படத்தைப் பற்றி விவாதிப்பது ஒரு விமர்சகர்களுக்கு மிகவும் சவாலானது. படத்தின் பல கூறுகளை உடைத்துவிட்டால், படம் பார்க்க செல்பவர்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்.

சமீபத்தில் ஹாலிவுட், பாலிவுட், தமிழ் தவிர்த்து தென்னிந்திய திரையுலகில் இருந்து வெளிவந்த சில த்ரில்லர் சினிமாக்களை பார்த்தோம். இருப்பினும், மகாராஜா தன்னை ஒரு த்ரில்லராக காட்டிக்கொள்ளாமல் பல திருப்புமுனை காட்சிகளுடன் நகர்கிறது. திரைக்கதையின் புத்திசாலித்தனம் திரை முழுவதும் நிறைந்து, இறுதிவரை பார்வையாளர்களின் முழு கவனத்தை ஈர்க்கிறது.

ஆழமான உணர்ச்சிக் கருப்பொருளை கவனமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.வசீகரிக்கும் திரைக்கதையை எப்படி உருவாக்குவது என்பதற்கு மகாராஜா ஒரு முன்மாதிரியான படமாக விளங்குகிறது.

முதல் பாதியின் பெரும்பகுதி, திருடு போன குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிப்பதில் விஜய் சேதுபதியின் அசைக்க முடியாத உறுதியையும்,
காவல்துறையுடன் அவரது தொடர்புகளையும் மையமாகக் கொண்டுள்ளது.அதன் மையத்தில் ஒரு பழிவாங்கும் நாடகம் ஒளிந்திருப்பதை நம்மால் உணர முடியாத அளவிற்கு இயக்குனரின் நான்-லீனியர்அணுகு முறை வியக்க வைக்கிறது.

கதையில் வரும் காவல்துறைஅதிகாரிகளைப் போலவே, கதாநாயகன் குப்பைத் தொட்டியை உண்மையாகத் தேடவில்லை என்று பார்வையாளர்கள் அனுமானிக்கமுடிந்தாலும், அதற்கு பதிலாக, நாயகன் உண்மையை வெளிகொணர அல்லது அவருக்கு பெரும் தீங்குவிளைவித் தவர்களை அடையாளம் காண ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை, அதற்குள் இருக்கிற நியாயமானநோக்கங்கள் என்ன என்பதை நம்மால் முழுமையாக யூகிக்க முடியாத அளவுக்கு நெறியாள்கை திறன்பட கையாளப்பட்டிருக்கிறது.

க்ளைமாக்ஸில் சில திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணர, கொள்ளையர்கள், காவல்துறை, விஜய் சேதுபதியின் வாழ்க்கை மற்றும் ஆரம்ப விபத்து உட்பட அனைத்து இழைகளும் ஒன்றிணைந்து, இறுதி யாக ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பு நிகழ்கிற போது திரையரங்கு அதிர்வடைகிறது.

மகாராஜா ஒரு த்ரில்லராக அறியப்பட்டாலும், பல குழப்பமான விஷயத்தையும் பேசுகிறது,குழப்பமின்றி பேசுகிறது. உணர்வுபூர்வமாக இயக்கப்பட்டுள்ள இந்ததிரைக்கதையில் த்ரில்லர் கூறுகளை விட, கதையின் உணர்வுபூர்வமான அம்சங்கள் மற்றும் அது தரும்உணர்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கூடுதலாக, படம் காவல்துறை அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை துல்லியமாக சித்தரிக்கிறது. திரைப்படத்தில் சில குறைபாடுகள் உள்ளன.தேவையில் லாமல் நீட்டிக்கும் சிலபகுதிகள். இருப்பினும் இந்தகுறைபாடுகள் படத்தின் ஓட்டத்தை கணிசமாக பாதிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக, மகாராஜா ஒரு எமோஷனல் த்ரில்லர். இது போன்ற கதைகளில் இருந்து எதிர்பார்க்கக்கூடிய வழக்கமான வணிகக் கூறுகள் இல்லாவிட்டாலும், திறமையாக வடிவமைக்கப்பட்ட தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான படம் எனலாம்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர்# 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top