பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பயணத் திட்டங்கள் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், 76 வயதான தலைவர் முகமத் யூனுஸ் நாடு திரும்பியவுடன் அங்கு ஜனநாயகம் திரும்பிவிடும். அதன் பின்னர் எனது தாய் நாடு திரும்புவார் என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் இன்று (8ம் தேதி) தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்கு “ஓய்வு பெற்ற பிரதமராக அல்லது செயலில் உள்ள பிரதமராக ” திரும்புவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜாய் கூறினார்.
“ஆம், அவர் பங்களாதேஷுக்குத் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் நமது தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம்; நாங்கள் அவர்களை சும்மா விடப் போவதில்லை” என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
“அவாமி லீக் பங்களாதேஷின் மிகப் பெரிய மற்றும் பழமையான அரசியல் கட்சி. எனவே நாங்கள் எங்கள் மக்களை விட்டு விலகிச் செல்ல முடியாது. ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டவுடன் அவர் நிச்சயமாக வங்கதேசத்திற்குத் திரும்புவார்” என்று அவர் மேலும் கூறினார்.
பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்று கடந்த 5ம் தேதி தேசிய தலைநகருக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கினார். அவர் விமானப்படை தளத்தில் இருந்து குறிப்பிடப்படாத பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று முன்னேற்றங்களை நன்கு அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக இன்று டாக்காவில் வந்து இறங்கினார். ஹசீனாவின் கடுமையான விமர்சகர். நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகள் தொடரும் நிலையில் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடந்த கால தவறுகள் எதிர்காலத்தை மறைக்க விடாமல்” முன்னேறுவதற்கான தனது உறுதிப்பாட்டை யூனுஸ் கடைப்பிடிப்பார் என்று ஜாய் நம்பிக்கை தெரிவித்தார்.
“அவர் தனது வார்த்தைக்கு உண்மையாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று ஜாய் கூறினார்.
அவரது அரசியல் எதிர்காலம்
ஷேக் ஹசீனாவின் சொந்த அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது சகோதரி சைமா வாஸேத் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்து, ஜாய் உறுதியற்றவராக இருந்தார்.
“இந்தக் கேள்விக்கு என்னால் திட்டவட்டமான பதிலைச் சொல்ல முடியாது. ஆனால் பங்களாதேஷைக் காப்பாற்றவும், அவாமி லீக்கைப் பாதுகாக்கவும் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். முஜிப் குடும்பம் அவர்களைத் துக்கத்தில் விடாது,” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நாட்டில் நிலவி வரும் அமைதியின்மையை தூண்டிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“சூழல் ஆதாரங்களைக்கொண்டு நான் உறுதியாக உள்ளேன்; பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புகள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டு, துல்லியமாக திட்டமிடப்பட்டு, சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் செய்யப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் அதை மோசமாக்க முயன்றனர்,” என்று அவர் கூறினார்.