Close
செப்டம்பர் 19, 2024 11:02 மணி

ஆதிதிராவிடர் தமிழ்நாட்டில் முதல்வராக வர முடியாது என்ற திருமாவளவன் கருத்தை ஆதரிக்கிறேன்: சீமான் பேட்டி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் உள்ள நாம்தமிழர் கட்சி நிர்வாகி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சீமான்.

சிவகங்கை, ஆக: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் தடாசந்திரசேகரனின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதன்கிழமை  வந்த நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஆதிதிராவிடர் தமிழ்நாட்டில் முதல்வராக வர முடியாது என்ற திருமாவளவன் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால் திமுகவின் மீது நம்பிக்கை உள்ளது என்கிற அவரது கருத்தை மறுக்கிறேன்.

முதல்வர் வீட்டில் இருந்துதான் துணை முதல்வர் வரமுடியுமா? நாட்டில் இருந்து வரமுடியாதா? புதிய தலைமுறை உருவாகி வருகிறது. அது அதனை மாற்றும் என்ற  நம்பிக்கை உள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி மாநாடு நடத்த இடத்தை தேர்வு செய்வதில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கும் போது விமர்சனமும் இடையூறுகள் வரத்தான் செய்யும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்  விமர்சனங்களையும் தடைகளையும்  தாண்டித்தான் கட்சியை நடத்தினர்.

நான் கட்சி ஆரம்பித்த போது பல கொடுமைகளை அனுபவித்துள்ளேன். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டப்படுவது  சர்வாதிகாரம். இங்கு நடப்பது ஜனநாயகம் என்று எப்படி கூறமுடியும். சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு போடப்படுவது, கேவலமான அரசியல் பழிவாங்கல்.  சாராயத்தை அரசே விற்கும் போது, பள்ளி மாணவர்கள் முன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது வேடிக்கையானது.

சீமானின் தம்பிகளின் வாக்குகளை கவருவதற்காகவே தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தல் வரை 18 மாதங்களுக்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும். இது ஒரு வாக்குக்கு ரூ. 18 ஆயிரம் கொடுப்பதற்கு சமமானது. எல்லா மாநிலங்களிலும் கள் உணவுப் பொருளாக இருக்கும் போது, தமிழகத்தில்  அதை போதையூட்டும் பானமாக்கி தடை செய்யப்பட்டுள்ளதற்கு,  ஆட்சியாளர்கள் மது ஆலைகள் நடத்தி வருவதுதான்  காரணம். துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம் என்றார் சீமான்.

இதையடுத்து நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிரீதரன்,  அமெரிக்கன் கல்லூரி முன்னாள்பேராசிரியர் நெடுமாறன், தொழிலதிபர் அஷ்ரப் அகமது,,  கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசு, ஹுமாயூன், கோட்டைகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் உள்ள நாம்தமிழர் கட்சி நிர்வாகி தடாசந்திரசேகரன் நினைவேந்தல் கூட்டத்தில்  பேசிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிரீதரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top