Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
பிரம்மா வாழ்க்கையை மங்கலகரமாக மாற்றித் தர வேண்டும் என்பதற்காக பக்தர்கள் மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்திரம் என அனைத்தும் மஞ்சளில் சாற்றி வழிபடுகிறார்கள். தாமரை மலர், புளியோதரை நைவேத்தியம் படைத்து வியாழக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
இங்கு ஒருமுறை வந்து வழிபட்டு சென்றாலே அவர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மையாக சொல்கிறார்கள் இங்கு வந்து தரிசனம் செய்து நல்வழி கண்டவர்கள்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
தலையெழுத்தை மாற்றும் கோயில் :
காக்கும் கடவுளான திருமாலுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக்கும் மட்டுமே உலகம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. ஆனால் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஒரு சில கோயில்களில் மட்டுமே தவி சன்னதி உள்ளது. பெரும்பாலும் சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் கோயில்களில், பெருமாளின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய தாமரையின் மீது அமர்ந்த நிலையில் மட்டுமே பிரம்மாவை தரிசிக்க முடியும்.
ஆனால் பிரம்மாவிற்கு என்று தனி சன்னதி உள்ள கோயில்களில் மிகவும் தனிச்சிறப்பானது தான் இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
“என்னடா வாழ்க்கை இது…என்று விரக்தி நிலையில் இருப்பவர்கள் ‘பிரம்மன் என் தலையெழுத்தை ஏன் இப்படி எழுதி விட்டான் ? என் தலையெழுத்து மாறாதா?” என புலம்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்களா?
அப்படியானால் நீங்க செல்ல வேண்டிய கோயில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி என்னதாங்க இந்த கோயிலில் சிறப்பு என்று நீங்கள் கேட்பதற்கு முன்னரே நானே சொல்லிவிடுகிறேன். இங்கு சிவனுக்கு இணையாக பிரம்மாவிற்கும் தனி சன்னதி இருப்பது தான் அந்த சிறப்பு. இந்த கோயிலுக்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் சென்றால் நம்முடைய தலையெழுத்து மாறி விடும் என்பது ஐதீகம்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
பிரம்மபுரீஸ்வரர் கோயில் தல வரலாறு :
சிவன், உயிர்களை படைக்கும் தொழிலை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். ஆனால் தனது படைப்பு தொழிலால் ஆணவம் கொண்ட பிரம்ம தேவரின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி எடுத்துவிட்டார் சிவ பெருமான். அதோடு பிரம்ம தேவரை பூமியில் பிறக்கும்படி சாபம் அளித்தார் சிவன். தனது தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்புக் கேட்ட பிரம்மனிடம், பூவுலகில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என வழி காட்டினார் ஈசன்.
அதன்பிறகு பல்வேறு இடங்களில் 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிறகு இந்த தலத்திற்கு வந்து ஒரே இடத்தில் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பக்திக்கு மனம் இறங்கிய சிவ பெருமான், காட்சி கொடுத்ததுடன் இந்த தலத்திலேயே வீற்றிருந்து, நாடி வரும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி, அவர்களின் துன்பங்களை போக்குமாறு அருள்தந்தார்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
இருப்பிடம் மற்றும் வழி
இந்த கோயிலில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என்றாலும், இக்கோயிலை பக்தர்கள் அனைவரும் பிரம்மா கோயில் என்றே அழைக்கிறார்கள். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ., தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது. இந்த தலத்திற்கு அனைவராலும் நினைத்தவுடன் வந்து விட முடியாது. யாருடைய தலையெழுத்து மாற வேண்டும் என விதி இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வர முடியும் என இந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
தாயார் பிரம்ம சம்பத் கெளரி தனி சன்னதியில் அருள் செய்கிறார். கோயில் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும் 108 லிங்கங்களும் அதற்கு முன்பாக நந்தி சிலைகளும் காணப்படுகின்றன.
இவை பிரம்ம தேவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கங்கள் என சொல்லப்படுகின்றன. இங்குள்ள நந்தியை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நிஜமான காளை மாடு ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதை தொட்டு பார்த்தாலும் நிஜமான காளையை தடவுவது போன்ற உணர்வு ஏற்படும்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
குரு பரிகார தலம் :
இது குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரம்ம தேவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. குருவிற்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு பிரம்மாவிற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
வியாழக்கிழமையில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பிரம்மா காட்சி தருவார்கள். தலையெழுத்து சரியில்லை, தீராத துன்பத்தில் சிக்கி தவிக்கிறோம் என்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து, தங்களின் ஜாதகத்தை பிரம்மாவின் காலடியில் வைத்து, வணங்கி, அர்ச்சனை செய்து எடுத்துச் சென்றால் அவர்களின் தலையெழுத்து மாறி விடும் என்பது நம்பிக்கை.
பதஞ்சலி சித்தர் ஜீவ சமாதி :
பிரம்மாவை வணங்கி விட்டு பிரகாரத்தை சுற்றி வரும் போது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி காணப்படுகிறது. இங்கு அமர்ந்து தியானம் செய்து சிறப்பானது ஆன்மிக பலத்தை தரும் என்பது நம்பிக்கை. மேலும் சதய நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால் கலைகளில் உயர்வான இடம், எலும்பு தொடர்பான நோய்கள் நீங்குவதாக ஐதீகம். திருமண தடை, பிரிந்த கணவன் மனைவி சேர்வது, நோய்கள் நீங்க, பிரச்சனைகள் தீர, தொழில், வியாபார விருத்தி அடைய பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வழிபடலாம்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
ஈசனை தரிசிக்கும் சூரியன் :
இக்கோயிலில் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது ஏழரை நிமிடங்கள் சூரிய ஒளிவிழும். அடுத்த ஏழு நிமிடங்கள் அம்பாள் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடைபெறும். முருகன் வழிபட்ட லிங்கம், நான்கு தூண்களில் நரசிம்ம அவதாரத்தை விளக்கும் காட்சிகள், எலும்பு நோய்கள் தீர தனி பூஜை நடத்தப்படுவது என பல சிறப்புக்கள் காணப்படுகின்றன. இக்கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது என சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு :
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருவதை குறிக்கும் வகையில் ஏழு நிலை ராஜகோபுரத்தை கடந்து வந்து சூரிய பகவான், ஈசனை தரிசிப்பதாக ஐதீகம். இக்கோயிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை அடுத்து பிரம்மா சன்னதி, அடுத்து விஷ்ணு சன்னதி, அதற்கு பிறகு மூலவர் பிரம்மபுரீஸ்வர் என வரிசையாக தரிசிக்கலாம்.
இது மிகவும் விசேஷமான அமைப்பாகும். தெற்கு நோக்கு அமைந்துள்ள கால பைரவர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகநாதர் ஆகிய சன்னசதிகள் காணப்படுகின்றன.
முருகப் பெருமான் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே படைகளை திரட்டிக் கொண்டு சூரனை வதம் செய்ய புறப்பட்டதாகவும், அதனால் இந்த ஊருக்கு திருப்படையூர் என்ற பெயர் வந்ததாகவும், பிறகு அந்த பெயர்தான் மருவி திருப்பட்டூர் என்றானதாகவும் சொல்லப்படுகிறது. முருகன் வழிபட்ட லிங்கத்திற்கு கந்தபுரீஸ்வரர் என்று பெயர்.
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
திருவிழாக்கள் :
பங்குனி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை வருடப்பிறப்பின் போது பஞ்சாங்கம் படித்தல், ஆடி பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி பெளர்ணமி, கார்த்திகை சங்காபிஷேகம், மகா சிவராத்திரி ஆகியனை வெகு விமர்சையாக நடைபெறும்.
கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 07.30 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரை கோவில் திறந்திருக்கும்.
கோயில் முகவரி :
ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்பட்டூர், மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம் – 621105
தொலைபேசி : 0431 – 2909599
Thirupattur Brahmapureeswarar Temple History in Tamil
வழிகாட்டல்
திருச்சியில் இருந்து சென்னை நெடுஞ்சாலையில் 25வது கிலோமீட்டரில் சிறுகனுர் கிராமம் உள்ளது. அங்கிருந்து திருப்பட்டூர் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சி உள்ளன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகள் உள்ளன.