Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!.. பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி

தமிழ்நாடு

பாடகி எல்.ஆர். ஈஸ்வரி

யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம…தாய்க்குத் தாங்கவில்லை!.. பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.
உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.,ஜிக்கி, லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது. ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றதுஅன்றைய இளைஞர் கூட்டம்.
ர்ர்ர்ருக்குமணியே!…பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது. வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.
இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம். அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக் கொண்டார்.
பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது. அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.
ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி. அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.1954 -ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது. வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.
திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான். இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.
நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும். இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார். தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம். ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.
ஏற்கெனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.
1961 -ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.
சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி. இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை. இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.
பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.
டி.எம்.எஸ் -ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை…ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!…எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா…டடட்.. டடட்டீ…திரையில் அப்படியே தெரியும். கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.
குடி..மகனே…பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை…என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.
விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்…ரகசிய இதயம்… பொன்னுழகில்…நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது….நீர் குடித்த மேகம்…என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.
கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ…கண்ணா..ளே ஆயிரம் சேதி!… நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!…அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.
வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ…கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ… சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..
கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா…ஹா..ஹா…அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி…வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.
நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!…வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்…காதது!..ஹ..ஹ்ஹா…துடித்து எழுந்தது!… கதை முடிக்க நினைத்தது!… நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.
எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா…கள்ளூறும் ரோஜா…கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! …கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! … அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.
கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!…இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.
மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட…அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ…ஆறேழு நாட்கள் போகட்டும்….ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது…ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.
அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்…ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.
சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்…சிலர் பாட்டில் மயங்குவார்…சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா… மம்மா …பப்பா. ..ஹோ…உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்…கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.
துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.
கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க….ஏன்டீ உனக்கு…அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.
அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.
எல்லோரும் பார்க்க…என் உல்லாச வாழ்க்கை…பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி… ம்ம்ம் நானொரு கதாநாயகி….நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!… முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.
நானொரு காதல் சன்யாசி….நாளொரு மேடை என் ராசி…பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.
ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி.. பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. படித்ததில் பிடித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top